தமிழகத்தில் பள்ளி & கல்லூரி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை - விண்ணப்பங்கள் வரவேற்பு!

தமிழகத்தில் பள்ளி & கல்லூரி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை – விண்ணப்பங்கள் வரவேற்பு!

தமிழகத்தில் சிறுபான்மையின மாணவர்களுக்கு ஆண்டுதோறும் மத்திய அரசு சார்பில் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது (2022 – 2023ம் கல்வியாண்டிற்கு) ஆன்லைன் மூலமாக சிறுபான்மையின மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இந்தியாவில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயில கூடிய ஏழை எளிய மாணவர்களுக்கு, கல்லூரி மாணவர்களுக்கும் மத்திய அரசு சார்பாக கல்விக்கு உதவும் வகையில் மாதந்தோறும்/ வருடந்தோறும் உதவித்தொகை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த வகையில் பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் இனத்தவர்கள், சிறுபான்மை மாணவர்களுக்கும் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த உதவித்தொகைகள் மூலம் மாணவர்கள் இடை நிற்றல் இன்றி கல்வியை கற்று வருகின்றனர். மேலும், இந்த உதவித்தொகை திட்டத்தின் கீழ் பணம் பெற சில நிபந்தனைகள் உள்ளன. அதனடிப்படையில் தகுதியானவர்களுக்கு மட்டுமே உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் உதவித்தொகை திட்டம் குறித்து திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் முக்கிய தகவலை பகிர்ந்துள்ளார். அதாவது தமிழகத்தில் மத்திய அரசால் சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டுள்ள இஸ்லாமியர், கிறிஸ்துவர், சீக்கியர், புத்த மதத்தினர், பார்சி மற்றும் ஜெயின் மதத்தை சேர்ந்த அரசு, அரசு உதவிபெறும் மற்றும் மத்திய, மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் 2022-23-ம் கல்வியாண்டில் 1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு பள்ளிப்படிப்பு உதவித்தொகை வழங்கப்படுகிறது.

அதாவது  11-ம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை படிப்பவர்களுக்கு பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகையும் மற்றும் தொழிற்கல்வி மற்றும் தொழில்நுட்ப கல்வி படிப்பவர்களுக்கு தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை பெறுவதற்கு www.scholarships.gov.in என்ற தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் பள்ளிப்படிப்பு கல்வி உதவித்தொகை திட்டத்துக்கு வருகிற செப்டம்பர் மாதம் 30-ந் தேதி வரையிலும், பள்ளி மேற்படிப்பு தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை பெற வருகிற அக்டோபர் மாதம் 31ஆம் தேதி வரையிலும் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.