ஹராரே: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

மூன்று 3 ஆட்டங்கள் கொண்ட தொடரின் இரண்டாவது ஒருநாள் போட்டியில் இன்று டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங்கை தேர்வு செய்தது.

ஜிம்பாப்வே அணி தனது இன்னிங்ஸில் 38.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 161 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியில் ஷான் வில்லியம்ஸ் 42 ரன்களையும், ரியான் பர்ல் 39 ரன்களையும் சேர்த்தனர். இன்னசன்ட் கையா, ரஸா ஆகியோர் தலா 16 ரன்களை எடுத்தனர். எஞ்சிய வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களிடம் ஆட்டம் இழந்தனர்.

இந்திய தரப்பில் மிகச் சிறப்பாக பந்துவீசிய ஷர்துல் தாக்கூர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். சிராஜ், பிரசித், அக்சர், குல்தீப், தீபக் ஹூடா தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

162 ரன்கள் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, 25.5 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. சஞ்சு சாம்சன் அட்டகாசமாக பேட் செய்து ஆட்டமிழக்காமல் 43 ரன்கள் சேர்த்தார். ஷிகர் தவண், சுப்மன் கில் ஆகியோர் தலா 33 ரன்களையும், தீபக் ஹூடா 25 ரன்களையும் எடுத்தனர். இஷான் கிஷன் 6 ரன்களிலும், கே.எல்.ராகுல் ஒரு ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அக்சர் படேல் ஆட்டமிழக்காமல் 6 ரன்கள் சேர்த்திருந்தார். இப்போட்டியில் சஞ்சு சாம்சன் ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை இந்தியா 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.Source link