வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

ஸ்ரீநகர் : ஜம்மு – காஷ்மீரில் நடக்க உள்ள வாக்காளர் பட்டியல் திருத்தத்தின்போது, வெளிமாநிலத்தைச் சேர்ந்த 25 லட்சம் பேரை புதிதாக சேர்க்க உள்ளதாக வெளியான செய்திக்கு, ஜம்மு – காஷ்மீர் நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது.

ஜம்மு – காஷ்மீரில் வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி விரைவில் மேற்கொள்ளப்பட உள்ளது. இதில், வெளிமாநிலத்தைச் சேர்ந்தவரும் தங்களுடைய பெயரை சேர்க்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, ஜம்மு – காஷ்மீர் தலைமை தேர்தல் அதிகாரி சமீபத்தில் அறிவித்தார்.

latest tamil news

இதன் வாயிலாக, வாக்காளர் பட்டியலில் புதிதாக 25 லட்சம் பேர் சேர்க்கப்படுவர் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறியிருந்தார்.இதற்கு, ஜம்மு – காஷ்மீரைச் சேர்ந்த அனைத்து கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்நிலையில், ஜம்மு – காஷ்மீர் நிர்வாகம் சார்பில், உள்ளூர் பத்திரிகைகளில் விளம்பரம் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டு உள்ளதாவது:

வாக்காளர் பட்டியலை திருத்தும் பணிகளை, தேர்தல் கமிஷன் சட்டத்துக்குட்பட்டு அவ்வப்போது மேற்கொள்ளும். ஜம்மு – காஷ்மீரில், 2011ல் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தின்படி, மொத்த வாக்காளர் எண்ணிக்கை, 66 லட்சமாகும். தற்போதைய நிலையில் வாக்காளர் எண்ணிக்கை, 76 லட்சமாக உள்ளது.கடந்த 11 ஆண்டுகளில், 18 வயதை கடந்தோர் தங்களுடைய பெயரை சேர்த்துள்ளதால், இந்த எண்ணிக்கை உயர்ந்து உள்ளது.

ஏற்கனவே உள்ள விதிகளின்படி, உள்ளூரைச் சேர்ந்தவர்களே, தற்போது நடக்க உள்ள வாக்காளர் பட்டியல் திருத்தத்தின்போது, தங்களுடைய பெயரை சேர்க்கலாம். வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் பட்டியலில் சேர்க்கப்படுவதாகக் கூறப்படுவது, சிலரால் பரப்பப்பட்டுள்ள பொய் செய்தியாகும்.

ஜம்மு – காஷ்மீரில் வசிப்போர், வெளிமாநிலங்களில் உள்ள வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால், அதை நீக்கிவிட்டு, இங்கு பதிவு செய்யலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Source link