வன்னியர் சமுதாயத்தினருக்கு 20% தனி இட ஒதுக்கீடு வழங்கக் கோரி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகங்களின் முன்பு பாமகவினர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டு, கோரிக்கை மனுக்களை வழங்கினர்.
வன்னியர்களுக்கு 20% தனிஇட ஒதுக்கீடு மற்றும் கல்வி, வேலைவாய்ப்பில் அனைத்து சமூகங்களுக்கு கிடைத்த இடங்களை வெளியிடக் கோரி, தமிழகம் முழுவதும் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு பாமக சார்பில் நேற்று போராட்டம் நடைபெற்றது.
இதில், செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு அக்கட்சியின் மாவட்ட செயலாளர் காரணை ராதாகிருஷ்ணன் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. பின்னர் பாமகவினர் கோரிக்கைகளை வலியுறுத்தி வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கட்ராகவனிடம் மனு வழங்கினர்.
புனித தோமையார் மலை வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு பாமக நிர்வாகி நா.கண்ணன் தலைமையிலும், காஞ்சிபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு அக்கட்சியின் மாநில துணை அமைப்பு செயலாளர் வரதராஜன், மாவட்ட செயலாளர் உமாபதி தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதேபோல், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 13 வட்டார வளர்ச்சி நிர்வாக அலுவலகங்கள் முன்பு பாமகவினர்ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கோரிக்கை மனுக்களை வழங்கினர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் திருவள்ளூர், பூந்தமல்லி, திருத்தணி, வில்லிவாக்கம், சோழவரம், எல்லாபுரம் உள்ளிட்ட 14 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில், பாமகவினர் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு கோரி மனு அளிக்கும் போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர்.
இப்போராட்டத்தில், பாமக துணை பொதுச்செயலர்கள் பாலயோகி, கே.என்.சேகர், பிரகாஷ் மற்றும் மாநில துணை அமைப்புச் செயலர் வெங்கடேசன், மாநிலஇளைஞரணி துணைச் செயலர் தினேஷ் உள்ளிட்டோர் பங்கேற்று இட ஒதுக்கீடு கோரி மனு அளித்தனர்.