திருச்சி மாவட்டத்தில் 2-வது நாளாக இன்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழ்நாடு முதல்வருமான பழனிசாமி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

இன்று (டிச. 31) பிரச்சாரத்தை தொடங்குவதற்கு முன் ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாதர் கோயிலில் வழிபாடு நடத்தச் சென்ற முதல்வர் பழனிசாமிக்கு, ரங்கா ரங்கா கோபுர வாசலில் கோயில் சார்பில் பூரணகும்ப மரியாதை அளிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன், கோயில் இணை ஆணையர் பொன்.ஜெயராமன், கோயில் அர்ச்சகர் சுந்தர் பட்டர் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

கோயிலுக்குள் சென்ற முதல்வர் பழனிசாமி, ரங்க விலாச மண்டப வாயிலில் நின்ற கோயில் யானை ஆண்டாளுக்கு பழங்களை உணவளித்தார்.

யானையிடம் ஆசி பெற்ற பிறகு, கருடாழ்வார், மூலவர் சன்னதி, தாயார் சன்னதி, உடையவர் சன்னதி ஆகிய இடங்களில் வழிபாடு நடத்தினார்.

தொடர்ந்து, கோயில் சார்பில் முதல்வருக்கு மரியாதை செய்யப்பட்டு, பிரசாதம் வழங்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து, ராஜகோபுரம் அருகே முதல்வர் பழனிசாமி பேசியதாவது:

“மறைந்த முதல்வர் ஜெயலலிதா வென்ற தொகுதி ஸ்ரீரங்கம். அவர் மறைந்தாலும் அவர் செய்த சாதனைகளால் அவரது புகழ் நிலைத்து நிற்கிறது. அவர் முதல்வராக இந்தத் தொகுதி உறுதுணையாக இருந்தது. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தத் தொகுதியில் முதல்வராக நான் நின்று பேச வாய்ப்பளித்த இறைவனுக்கு நன்றி.

ரூ.100 கோடியில் கொள்ளிடம் புதிய பாலம், திருவானைக்காவல் மேம்பாலம், வண்ணத்துப்பூச்சி பூங்கா, தேசிய சட்டப் பல்கலைக்கழகம், தோட்டக்கலைக் கல்லூரி, ஸ்ரீரங்கம் வரும் பக்தர்கள் தங்குவதற்காக யாத்திரி நிவாஸ், குடிசை மாற்று வாரியம் மூலம் 400 வீடுகள், ரூ.2,000 கோடியில் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் உட்பட ஸ்ரீரங்கம் தொகுதியில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை முதல்வராக இருந்தபோது ஜெயலலிதா செயல்படுத்தினார்.

முக்கொம்பில் உடைந்த கொள்ளிடம் கதவணைக்குப் பதிலாக புதிய கதவணை கட்டும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகள் 3, 4 மாதங்களில் நிறைவடைந்து பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.

தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தை அமைத்து இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தந்தார் ஜெயலலிதா. தற்போது அந்த ஆலையை ரூ.2,000 கோடியில் தமிழ்நாடு அரசு விரிவுபடுத்ததி வருகிறது.

வளமான, செழிப்பான, அனைத்து அடிப்படைத் தேவைகளும் நிறைந்த பகுதியாக ஸ்ரீரங்கம் தொகுதியை மறைந்த முதல்வர் ஜெயலலிதா உருவாக்கித் தந்தார்.

மீண்டும் ஜெயலலிதாவின் ஆட்சி நடைபெற வேண்டுமெனில் சட்டப்பேரவையில் அதிமுகவுக்கு பெரும்பான்மை வேண்டும்.

2021 சட்டப்பேரவைப் பொதுத் தேர்தலில் ஸ்ரீரங்கம் தொகுதி ஜெயலலிதாவின் கோட்டையாக நீடிக்க இரட்டை இலை சின்னத்துக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும்.

அதிமுக அரசுக்கு ஸ்ரீரங்கம் தொகுதி பக்கபலமாக இருக்கும் வகையில் அதிமுக வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னத்தில் மக்கள் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்”.

இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து, சோமரசம்பேட்டையில் மகளிர் சுய உதவிக் குழுவினர் கலந்து கொண்ட கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி பேசுகையில், “மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் தமிழ்நாடு அரசு செய்து வருகிறது. பெண்கள் வாழ்வில் முன்னேற வேண்டும் என்று அரும்பாடுபட்டவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா. மகளிருக்காக அவர் வழங்கிய திட்டங்களை அதிமுக அரசு தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. கரோனோ காலத்திலும் சுய உதவிக் குழுக்களுக்கு பல்வேறு உதவிகளை அரசு செய்தது. மகளிருக்கு அதிக பாதுகாப்பை அரசு அளித்து வருகிறது. பெண்கள் நினைத்தால் எதையும் சாதிக்கலாம். தேர்தலின்போது நீங்கள் அதிமுகவுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்” என்றார்.Source link