நாகப்பட்டினம்: நாகை மாவட்டம் வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டுப் பெருவிழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி, பேராலய முகப்பிலிருந்து மாலை 5.45 மணிக்கு கொடி ஊர்வலம் புறப்பட்டு, பேராலயத்தை சுற்றிலும் திரண்டிருந்த பக்தர்கள் கூட்டத்துக்கு மத்தியில் சென்று கடற்கரை சாலை, ஆரிய நாட்டுத் தெரு வழியாக மீண்டும் பேராலய முகப்பை வந்தடைந்தது.

தஞ்சை மறை மாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் அடிகளார், கொடியை புனிதம் செய்து வைத்ததைத் தொடர்ந்து, கொடியேற்றம் நடைபெற்றது. கம்பத்தில் கொடி ஏற்றப்பட்டதும், பக்தர்கள் மாதாவைப் போற்றி முழக்கமிட்டனர். அதன்பின், வாண வேடிக்கை நடைபெற்றது. வேளாங்கண்ணி பேராலயம் மின்னொளியால் ஜொலித்தது.

கொடியேற்ற விழாவில் நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ், பேராலய அதிபர் இருதயராஜ் அடிகளார், துணை அதிபரும் பங்குத்தந்தையுமான அற்புதராஜ் அடிகளார் மற்றும் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

செப்.7-ம் தேதி பெரிய தேர் பவனி

10 நாட்கள் நடைபெறும் ஆண்டுப் பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர் பவனி செப்.7-ம் தேதி இரவு நடைபெறும். அதைத்தொடர்ந்து, செப்.8-ம் தேதி காலை 6 மணியளவில், மாதாவின் பிறந்த நாளை முன்னிட்டு விண்மீன் ஆலயத்தில் தஞ்சை மறைமாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் அடிகளார் தலைமையில் சிறப்பு கூட்டுத் திருப்பலி நடைபெறும். பின்னர், அன்று மாலை 6 மணிக்கு கொடி இறக்கப்பட்டு விழா நிறைவுபெறும். கொடியேற்றத்தையொட்டி, நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் கு.ஜவஹர் தலைமையில் போலீஸார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர். மேலும், கடற்கரை பகுதியில் அசம்பாவிதங்கள் நேரிடாமல் தடுக்கும் வகையில், நாகை கடலோர பாதுகாப்புக் குழும போலீஸாரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டுப் பெருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது.Source link