உலகம் முழுவதும் கடந்த ஆண்டு ஏற்பட்ட கரோனா பெருந்தொற்றின் போது பெரும்பாலும் முதியவர்களே அதிகம் பாதிக்கப்பட்டனர். 

முதல் பேரிடரிலிருந்து மெல்ல மீண்டு வந்து கொண்டிருந்த நிலையில், இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே உலகை முடக்கிய இரண்டாம் பேரலை, நடுத்தர வயதினரை அதிகம் பாதித்து, பலிகொண்டு பல குடும்பங்களை சின்னாபின்னமாக்கிச் சென்றுவிட்டது.

கடந்த பேரலைகளின்போது கரோனா தொற்றைப் பற்றிய பல ஆராய்ச்சிகளில், கரோனா வைரஸ் குழந்தைகளை வேறுவிதமாகத் தாக்குவது கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது, அவர்களது நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் என்பதால், அவர்களை கரோனா தாக்கினாலும் அறிகுறிகள் ஏற்படுவதில்லை. நுரையீரலுக்குள் நுழைந்தாலும் மூச்சுத் திணறல் உருவாவதில்லை. ஆனால், நுரையீரலில் நுழைந்து ஆக்ஸிஜன் அளவு குறையும்போதுதான் பாதிப்பு வெளியே தெரிய வருகிறது.

எனவே, குழந்தைகளின் நுரையீரலை பலப்படுத்த வேண்டியத மிகவும் அவசியமாகிறது.

இதையும் படிக்கலாமே.. கரோனா மூன்றாம் அலை அவ்வளவு மோசமாக இருக்காது: எய்ம்ஸ் இயக்குநர்

குழந்தைகளின் நுரையீரலை பலப்படுத்த நம்மால் எப்படி முடியும்? அதுவும் அவர்கள் சொன்னால் செய்வார்களா? என்று கேட்வர்களுக்காகவே இந்த டிப்ஸ்.

அவர்களை விளையாடிக் கொண்டே, அவர்களுக்கு இது பயிற்சி என்று தெரியாமலேயே நுரையீரலை பலப்படுத்த முடியும்.

1. பொம்மையை குதிக்க வைக்கலாம்..
குழந்தையை தரையில் படுக்க வைத்து, அவர்களது வயிற்றின் மீது சிறிய பொம்மை ஒன்றை வையுங்கள். ஐந்து என்று எண்ணும் வரை அவர்களை மூக்கின் வழியாக காற்றை உள்ளே இழுக்கச் சொல்லுங்கள். அப்போது அவர்கள் வயிறு பெரிதாகும். வயிற்றுக்குள்ளேயே காற்றை வைத்துக் கொண்டு ஐந்து எண்ணுங்கள். பிறகு காற்றை மெதுவாக வெளியே விடச் சொல்லுங்கள். அப்போது, அவர்களது வயிற்றில் இருக்கும் பொம்மை குதித்து, பிறகு உள்ளே செல்வதைப் பார்த்துக் கொண்டே இவ்வாறு ஐந்து முறை செய்யச் சொல்லலாம்.

2. ஒரு சிறு வெள்ளைக் காகிதத்தில் தண்ணீரில் கலந்த வண்ணங்களை துளித்துளியாக விட்டுவிட்டு, ஒரு ஸ்டிராவை எடுத்து அதனை ஊதியே உருவங்களை உருவாக்கச் சொல்லுங்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு முறையும் பல பல உருவங்களை உருவாக்குவார்கள். இதன் மூலம், அவர்கள் வாய் வழியாக நன்கு காற்றை இழுத்து விடுவார்கள். இதுவும் ஒரு எளிதான பயிற்சியே.

3. கையில் ஏதேனும் ஒரு வாசனைப் பூ இருப்பதாக நினைத்துக் கொள்ளச் சொல்லலாம். அல்லது பூவைக் கொடுத்து அதனை நன்கு முகர்ந்து, வாசனையை உள்ளே இழுத்து வாய் வழியாக காற்றை வெளியே விடச் சொல்லலாம். இதையும் ஒரு 5 முதல் 10 முறை செய்யச் சொல்லலாம்.

4. வண்ணத்துப் பூச்சியாகலாம்..
குழந்தைகளை வண்ணத்துப் பூச்சி விளையாடலாம் என்றுச் சொல்லி அழையுங்கள். அவர்களை கைகளை பக்கவாட்டில் நீட்டி வைத்துக் கொண்டு, கைகளை மேலே உயர்த்தும் போது மூச்சை உள்ளே இழுக்க வேண்டும், கைகளை கீழே இறக்கும் போது மூச்சை வெளியே செலுத்த வேண்டும் என்று விளையாடுங்கள். இது மிகச் சிறந்த மூச்சுப் பயிற்சியாக அமையும்.

சோப்பு அல்லது ஷாம்புவை தண்ணீரில் கலந்து அதனை ஸ்டிரா கொண்டு ஊத விடலாம். பெரிய பெரிய நுரைகளை உருவாக்குமாறு உற்சாகப்படுத்துங்கள். இதுவும் நல்ல மூச்சுப் பயிற்சி.

இதையும் படிக்கலாமே.. தடுப்பூசி செலுத்திக் கொண்டால்.. இதெல்லாம் நன்மைகள் : ஆய்வில் தகவல்

ஒரு மெழுகுவார்த்தியை அவர்கள் அருகே வைத்துவிட்டு, அதனை கொளுத்தி, ஊதி அணைக்க வைக்கலாம். அவர்கள் ஊதி அணைக்கும் போது தூரத்தை அதிகரித்து பிறகு ஊத முடியாத தூரத்தில் வைத்து, ஊதுவதற்கு முயற்சிக்குமாறு சொல்லுங்கள். 

இவ்வாறு அவர்களை எந்த வகையிலும் மூச்சுப் பயிற்சியை மேற்கொள்ள வைக்கலாம். இதில் உங்களுக்குப் பிடித்தமானதை, எளிமையாக இருப்பதை நீங்கள் பின்பற்றலாம்.

நுரையீரலுக்கு நல்ல பயிற்சி கிடைப்பது அவசியம். ஒருவேளை கரோனா மூன்றாம் அலை உருவானால் அதிலிருந்து குழந்தைகளைக் காக்க உதவலாம்.
 Source link