மதுரை: மதுரையில் முதல்முறையாக வீடுகளில் ஹைட்ரோபோனிக்ஸ் (மண்ணில்லா விவசாயம்) முறையில் தோட்டம் அமைத்து வீட்டிற்கு தேவையான கீரைகள், காய்கறிகள் உற்பத்தி செய்வதை அறிமுகப்படுத்தும் வகையில் தோட்டக்கலைத்துறை சார்பில் இன்று செயல்விளக்கம் நடைபெற்றது.

தோட்டக்கலைத்துறை சார்பில் வீட்டுத்தோட்டங்கள் அமைப்பதை ஊக்குவிக்க திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. வீடுகளில் ஹைட்ரோபோனிக்ஸ் (மண்ணில்லா விவசாயம்) முறை தோட்டம், செங்குத்து தோட்டம் அமைத்து வீட்டுக்கு தேவையான கீரைகள், காய்கறிகள் உற்பத்தி செய்யும் முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

இதற்கான செயல்விளக்கம் நேற்று தோட்டக்கலைத்துறை அலுவலகத்தில் தோட்டக்கலை துணை இயக்குநர் கி.ரேவதி தலைமையில் செயல்விளக்கம் நடைபெற்றது. இதில் ஹைட்ரோபோனிக்ஸ் முறை தோட்டம், செங்குத்து தோட்டம் மூலம் கீரைகள், காய்கறிகள் உற்பத்தி செய்யும்முறைகள் குறித்து விளக்கப்பட்டது.

இதுதொடர்பாக துணை இயக்குநர் கி.ரேவதி கூறுகையில், “அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இம்முறைகள் மூலம் வீட்டுக்கு தேவையான தரமான கீரைகள், காய்கறிகளை உற்பத்தி செய்து கொள்ளலாம். இதனை ஊக்குவிக்க மாநில தோட்டக்கலை வளர்ச்சி திட்டத்தில் மதுரை மாவட்டத்திற்கு நடப்பு நிதியாண்டிற்கு ரூ.6 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் ஹைட்ரோபோனிக்ஸ் முறை தோட்டம் அமைக்க 20 பயனாளிகளுக்கு ரூ.3 லட்சமும், செங்குத்து தோட்டம் அமைக்க 20 பயனாளிகளுக்கு ரூ. 3 லட்சம் என மொத்தம் ரூ. 6 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது.

இதில் மொத்த செலவு ரூ.30 ஆயிரத்தில் 50 சதவீதம் மானியமான ரூ.15 ஆயிரம் பின்னேற்பு மானியமாக வழங்கப்படும். இதற்கான பயனாளிகள் தேர்வு நடந்து வருகிறது. மேலும் விவரங்களுக்கு தல்லாகுளம் மேலக்கண்மாய் தெருவிலுள்ள வேளாண்மை இணை இயக்குநர் அலுவலக வளாகத்தில் 3வது தளத்திலுள்ள தோட்டக்கலை துணை இயக்குநர் அலுவலகத்தில் தொடர்பு கொள்ளலாம்” என்றார்.Source link