சென்னை: பதிவுத்துறை இணையதளத்தில் இருந்து வில்லங்கச் சான்று பதிவிறக்கம் செய்வதில் நிலவிய சிக்கல் நீங்கி விட்டதாக பதிவுத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் கடந்த சில தினங்களாக இ-சேவை மையங்கள் மற்றும் தனியார் கணினி மையங்கள், பொதுமக்களின் கணினிகள் மற்றும் ஸ்மார்ட்போன்கள் வழியாக பதிவுத் துறை இணையதளத்தில் இருந்து வில்லங்கச் சான்றுகளை பதிவிறக்கம் செய்ய முடியாமல் சிரமம் ஏற்பட்டது.

இதுதொடர்பாக மாநிலம் முழுவதும் இருந்து தகவல் தொழில்நுட்பத் துறைக்கும், பதிவுத் துறைக்கும் ஏராளமான புகார்கள் வந்தன. அதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் பதிவுத் துறை இணையதளத்தில் சிக்கல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பதிவுத்துறை தலைவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

பொதுமக்களின் வசதிக்காக சொத்து குறித்த வில்லங்க விவரங்களை பதிவுத் துறையின் வலைதளத்திலிருந்து இணையம் வழியாக இலவசமாக பார்வையிட ஏற்படுத்தியிருந்த வசதியைப் பயன்படுத்தி சில கைபேசி செயலிகள் மூலம் வில்லங்கச் சான்றுகளை தரவிறக்கம் செய்து வருவது சமீபத்தில் கண்டறியப்பட்டுள்ளது.

இதனால் ஏற்பட்ட நெட்வொர்க் பிரச்சினையை நிவர்த்தி செய்து மென்பொருளை மேம்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்றன. தன்னிச்சையாக பதிவுத் துறை வலைதளத்தில் டேக் செய்யப்பட்டிருந்த அந்த கைபேசி செயலிகளின் இணைப்பு தற்போது துண்டிக்கப்பட்டு, நெட்வொர்க் பிரச்சினை சீராக்கப்பட்டுள்ளது.

செப்.2 முதல் முதல் பொதுமக்கள் எந்தவிதமான சிரமமும் இன்றி ஆவணப்பதிவுகளை மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், மென்பொருள் துரிதமாக செயல்படுவது தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட்டு ஆவணப்பதிவு தங்கு தடையின்றி நடைபெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.Source link