தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள தமிழக முதல்வர் பழனிசாமிக்கு புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் கடவுள் முருகனை நினைவுகூரும் வகையில் இன்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வேல் ஒன்றைப் பரிசளித்தார்.

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் இன்று (டிச.31) தேர்தல் பிரச்சாரத்தை முடித்துக்கொண்டு திருச்சி செல்லும் வழியில் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் தமிழக முதல்வர் பழனிசாமிக்கு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

அப்போது, விராலிமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலையும், கடவுள் முருகனையும் நினைவுகூரும் வகையில் தமிழக முதல்வருக்கு அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வேல் வழங்கினார்.

பின்னர், திறந்த வேனில் தமிழக முதல்வர் பழனிசாமி பேசியதாவது:

“7.5 சதவீதம் உள் இட ஒதுக்கீட்டின் மூலம் விவசாயிகள், தொழிலாளர்கள் நிறைந்த புதுக்கோட்டை மாவட்டத்தில் ஏழை, எளிய குடும்பங்களில் இருந்து மருத்துவராகும் வாய்ப்பை அதிமுக அரசு ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

அதோடு, தமிழக அரசு வழங்க உள்ள ரூ.2,500 ரொக்கத்துடன் பொங்கல் தொகுப்பைப் பெற்று பொங்கல் பண்டிகையைக் குடும்பத்தோடு மகிழ்ச்சியாகக் கொண்டாடுங்கள்.

புதுக்கோட்டை மாவட்டமானது ஜல்லிக்கட்டு வீரர்கள் விளையாடும் மைதானமாகத் திகழ்கிறது. கடந்த முறை உலக சாதனை நிகழ்த்திய விராலிமலை ஜல்லிக்கட்டை நானே நேரில் வந்து தொடங்கி வைத்திருக்கிறேன். நிகழ் ஆண்டும் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அரசு அனுமதி அளித்துள்ளது”.

இவ்வாறு முதல்வர் பழனிசாமி பேசினார்.Source link