ராஞ்சி:ஜார்க்கண்டில் விமான நிலைய அதிகாரி அறைக்குள் அத்துமீறி நுழைந்து, தனி விமானம் இயக்க கட்டாயப்படுத்திய பா.ஜ., – எம்.பி.,க்கள் உட்பட ஒன்பது பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
ஜார்க்கண்டில், முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது.இங்குள்ள, தியோகர் விமான நிலையத்துக்கு பா.ஜ., – எம்.பி., கள் நிஷிகாந்த் துபே, மனோஜ் திவாரி உட்பட ஒன்பது பேர் ஆக.,31 மாலை வந்தனர். அங்கிருந்து ராஞ்சி செல்ல தனி விமானத்தை இயக்க வலியுறுத்தினர்.
தியோகர் விமான நிலையத்தில் இருந்து மாலை 5:30 மணிக்கு மேல் விமானம் இயக்க அனுமதி இல்லை. ஆனால், 6:30 மணிக்கு வந்த ஒன்பது பேரும் விமானத்தை இயக்க வலியுறுத்தினர். இது தொடர்பாக விமான நிலைய பாதுகாப்பு அதிகாரியுடன் கடும் வாக்குவாதம் செய்தனர். பின், விமான நிலைய மேலாளர் அழுத்தம் தாங்காமல் விமானத்தை இயக்க ஒப்புதல் அளித்தார்.
இது தொடர்பாக, விமான நிலைய பாதுகாப்பு அதிகாரி அளித்த புகார்படி, தியோகர் போலீசார், பா.ஜ., – எம்.பி.,க்கள் உட்பட ஒன்பது பேர் மீதும் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக தியோகர் நகர போலீஸ் துணை கமிஷனர் மஞ்சுநாத் பஜந்திரி மற்றும் எம்.பி., நிஷிகாந்த் துபே ஆகியோரிடையே சமூக வலைதளமான ‘டுவிட்டரில்’ கடும் வாக்குவாதம் நிகழ்ந்தது.
இதில் துபே வெளியிட்டுள்ள பதிவில், ‘தியோகர் துணை கமிஷனர் மீது புதுடில்லியில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர், ஹேமந்த் சோரனுக்கு கைக்கூலியாக செயல்படுகிறார்’ என்று குற்றம் சாட்டியுள்ளார்.
சுரங்க அனுமதி முறைகேட்டில் முதல்வர் ஹேமந்தின் எம்.எல்.ஏ., பதவியை தகுதி நீக்கம் செய்யலாம் என தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ள நிலையில், பா.ஜ., – எம்.பி.க்கள் மீது ஜார்க்கண்ட் போலீஸ் வழக்குப் பதிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Source link