புதுடெல்லி: தனது வங்கி லாக்கரில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்திவரும் நிலையில் டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா, மனைவியுடன் வங்கிக் கிளையில் ஆஜரானார்.

டெல்லியில் மதுபானக் கடைகளுக்கு உரிமம் வழங்கியதில் முறைகேடுகள் நடந்ததாக எழுந்த புகாரை தொடர்ந்து, துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவின் வீடு உள்ளிட்ட 31 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் கடந்த 19-ம் தேதி சோதனை நடத்தினர். இதில் முக்கிய ஆவணங்களை கைப்பற்றியுள்ளனர். சிசோடியா உள்ளிட்ட 15 பேர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.

ஆனால் தன் மீதான புகார்களை சிசோடியா மறுத்து வருகிறார். பாஜக விருப்பப்படி சிபிஐ செயல்படுகிறது. ஆம் ஆத்மி அரசுகளின் செயல்பாடுகளால் குறிப்பாக கல்வித் துறையின் செயல்பாடுகளால் பாஜக கலக்கம் அடைந்துள்ளது என்று பதிலடி கொடுத்தார்.

இந்நிலையில் இன்று சிபிஐ அதிகாரிகள் மணிஷ் சிசோடியாவின் வங்கி லாக்கரில் சோதனை செய்து வருகின்றனர். முன்னதாக நேற்று மணிஷ் சிசோடியா தனது ட்விட்டர் பக்கத்தில் நல்வரவு சிபிஐ. லாக்கரில் எதுவுமே இருக்காது. இருப்பினும் நானும் எனது குடும்பத்தினரும் முழு ஒத்துழைப்பு அளிப்போம் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் இன்று காலை காசியாபாத் பஞ்சாப் நேஷனல் வங்கியில் சிபிஐ சோதனை நடத்தும்போது மணிஷ் சிசோடியாவும் அவரது மனைவியும் அங்கு வந்தனர். அந்தக் காட்சிகள் அடங்கிய வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.Source link