சிபிஐ பராமரிப்பில் லாக்கரில் இருந்த 103 கிலோ தங்கம் மாயமான விவகாரம் குறித்து சுரானாநிறுவனத்தின் முன்னாள் இயக்குநரிடம் சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தங்கம் இறக்குமதியில் மோசடி நடந்ததாக கூறி, சென்னை என்எஸ்சி போஸ் சாலையில் உள்ள சுரானா நிறுவனத்தில் சிபிஐ அதிகாரிகள் கடந்த 2012-ம் ஆண்டு சோதனை நடத்தி, 400 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்தனர். பறிமுதல்செய்யப்பட்ட 400 கிலோ தங்கமும்,சுரானா நிறுவனத்தில் உள்ள 72லாக்கர்களில் வைத்து சீல் வைக்கப்பட்டது. லாக்கர் சாவிகளும், தங்கம் பறிமுதல் தொடர்பான பட்டியல் ஆவணமும் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டன.

இதற்கிடையில், வங்கிகளிடம் சுரானா நிறுவனம் பெற்ற ரூ.1,160 கோடி கடனை ஈடுகட்டுவதற்காக, லாக்கர்களில் உள்ள தங்கத்தை வழங்குமாறு சிபிஐக்கு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, சுரானா நிறுவன லாக்கர்களில் இருந்த தங்கத்தை சமீபத்தில் எடைபார்த்தபோது 296 கிலோ தங்கம்மட்டுமே இருந்தது. 103 கிலோ தங்கத்தை காணவில்லை. மாயமான தங்கத்தை கண்டுபிடிக்கும் பொறுப்பு சிபிசிஐடியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சுரானா நிறுவனத்தில் எஸ்.பி. விஜயகுமார் தலைமையிலான சிபிசிஐடி போலீஸார் கடந்த 29-ம் தேதி ஆய்வு செய்தனர். தங்கம் மாயமான காலத்தில் அதன் நிர்வாகிகளாக இருந்தவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். சுரானா நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் விஜயராஜ் சுரானாவிடமும் விசாரணை நடத்தியுள்ளனர்.

‘‘தங்கத்தை சிபிஐ அதிகாரிகள் பறிமுதல் செய்தபோது நானும் உடன் இருந்ததாக, சிபிஐ ஆவணத்தில் குறிப்பிட்டுள்ளனர். ஆனால்,தங்கம் பறிமுதல் செய்யப்பட்டபோது நான் இல்லை. ஆவணத்தில்தவறான தகவலை பதிவு செய்துள்ளனர். தங்கம் மாயமானது குறித்து தேசிய சட்டத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்துள்ளேன். தங்கம் மாயமானது குறித்து டெல்லி சிபிஐ அதிகாரிகளும் என்னிடம் விசாரணை நடத்தினர்” என்று விஜயராஜ் சுரானா தெரிவித்ததாக சிபிசிஐடி போலீஸார் கூறினர்.

தங்கம் மாயமானது முதலில் எப்படி தெரியவந்தது, எதற்காக வழக்கு தொடர்ந்தார் என்பது குறித்து அவரிடம் விசாரணை நடந்து வருவதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.Source link