நியாயவிலைக் கடைகள் மூலம் வழங்கப்படும் டோக்கன்களுக்கு மட்டுமே வரும் 4-ம் தேதி முதல் பொங்கல் தொகுப்பு, ரொக்கத் தொகை வழங்கப்பட வேண்டும் என்று மாவட்ட நிர்வாகங்களுக்கு உணவுப் பொருள் வழங்கல் துறை ஆணையர் சஜ்ஜன் சிங் ரா சவான் அறிவுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் அரிசி குடும்ப அட்டைகளுக்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரூ.2,500 ரொக்கம் மற்றும் அரிசி, சர்க்கரை உள்ளிட்டவை அடங்கிய பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்தார். இதைத் தொடர்ந்து அரசாணை பிறப்பிக்கப்பட்டு, ஒரு நாளுக்கு 200 குடும்ப அட்டைகளுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கும் வகையில் கடந்த 26-ம் தேதி முதல் வீடு வீடாக டோக்கன் வழங்க உத்தரவிடப்பட்டது.

சில இடங்களில் வழங்கப்பட்ட டோக்கன்களில், அதிமுக நிர்வாகிகள் படம், பெயர் இடம்பெற்றதாக திமுக தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. சென்னை உயர் நீதிமன்றத்தில் இதுதொடர்பாக வழக்கும் தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின் போது, நியாயவிலைக் கடைகள் மூலமாக வழங்கப்படும் டோக்கனுக்கு மட்டுமே பொருட்கள் வழங்கப்படும் என்று அரசு தெரிவித்தது.

இந்நிலையில், மாவட்ட ஆட்சியர்களுக்கு உணவுப் பொருள் வழங்கல் துறை ஆணையர் சஜ்ஜன்சிங் ரா சவான் அனுப்பியுள்ள சுற்

றறிக்கையில் கூறியிருப்பதாவது:

வெளிநபருக்கு அனுமதி இல்லை

அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு மற்றும் ரொக்கத் தொகை ஜனவரி 4-ம் தேதி முதல் வழங்கப்படுகிறது. இதற்காக நியாயவிலைக் கடை பணியாளர்கள் டிசம்பர் 26-ம்தேதி முதல் வீடு வீடாக சென்று டோக்கன் விநியோகிக்க அறிவுரைகள் வழங்கப்பட்டன. இதைசரியான முறையில் பின்பற்றி, எந்த புகாருக்கும் இடமின்றி தொடர்புடைய கடை நிறுவனங்கள் வாயிலாக டோக்கனை அச்சடித்து பெற்று, அந்தடோக்கனை மட்டுமே பொதுமக்களுக்கு வழங்க வேண்டும். நியாயவிலைக் கடைக்கு தொடர்பு இல்லாதவர்களை இப்பணியில் ஈடுபடுத்தக் கூடாது. வெளிநபர்கள் டோக்கன் வழங்க அனுமதி இல்லை. தொடர்புடைய கடை நடத்தும் நிறுவனங்கள் வாயிலாக வழங்கப்படும் டோக்கன்களுக்கு மட்டுமே ஜனவரி 4-ம் தேதி முதல் பொங்கல் தொகுப்பு, ரொக்கத் தொகை வழங்கப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.Source link