அரசு மருத்துவக் கல்லூரியாக ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி ஆன நிலையில், தனியார் மருத்துவக் கல்லூரியின் கட்டணத்தைவிட அதிகம் வசூலிப்பதா என, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக, கி.வீரமணி இன்று (டிச.31) வெளியிட்ட அறிக்கை:

“அண்ணாமலை செட்டியாரின் அருட்கொடையினால் சிதம்பரத்தில் மீனாட்சி கல்லூரியாகத் தொடங்கப்பட்ட கல்லூரி, நீதிக்கட்சி ஆதரவுடன் நடைபெற்ற சுப்பராயன் அரசினால், தனியார் பல்கலைக்கழகமாக 1929 முதல் சட்டப்படி உயர்த்தப்பட்டது. அரசுகள் மானியம் வழங்கி உதவின.

கல்விப் புரட்சியைச் செய்த பெருமை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கு உண்டு

தமிழ்நாட்டில் சென்னைப் பல்கலைக்கழகம் என்று அரசு ஆதரவுடன் பிரிட்டிஷ் ஆட்சியில் நிறுவப்பட்டதை அடுத்து, தமிழ்நாட்டில் மிகவும் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, ஏழை, எளிய, கிராமப்புற முதல் தலைமுறையினர்களைப் பட்டதாரிகளாக்கி ஒரு கல்விப் புரட்சியைச் செய்த பெருமை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கே உண்டு.

அண்ணாமலை செட்டியாரும், அவரது மூத்த மகன் முத்தையா செட்டியாரும் மிகச் சிறப்பாக பல ஆண்டுகாலம் சிறப்பு குன்றாமல் நடந்து, சமூக நீதிக் கொடியும், பல அரசியல் தலைவர்களுக்கு நாற்றங்காலாகவும், தமிழ் அறிஞர்கள், தமிழ் இசை புத்தாக்க முயற்சியாளர்களுக்குரிய கல்விப் பண்ணயமாகவே தொடர்ந்தது!

பிறகு எம்.ஏ.எம்.ராமசாமி இணைவேந்தராக வந்த பிறகு, கொஞ்சம் கொஞ்சமாக அதில் தவறுகளும், ஊழல்களும் மலிந்தன.

கல்லூரிப் பணியாளர்களும், பொதுமக்களும், சமூக நீதி ஆர்வலர்களும் விரும்பியவாறு…

வேறு வழியின்றி, பணியாளர்களும், பொதுமக்களும், சமூக நீதி ஆர்வலர்களும் விரும்பியவாறு, அதனை மூடிவிடாமல் தொடர ஒரே வழி தமிழக அரசே அதனை எடுத்து நடத்துவதைத் தவிர வேறில்லை என்ற நிலையே நிர்பந்தமாகியது.

தமிழக அரசு எடுத்துக்கொண்ட பிறகு, சில சிறந்த அதிகாரிகள் பல குறைபாடுகளை நிவர்த்தி செய்து, இன்று அரசு மருத்துவக் கல்லூரியாகவே அது நடைபெற்று வருகிறது.

2013ஆம் ஆண்டு தமிழக அரசால் கையகப்படுத்தப்பட்டு, அரசு பல்கலைக்கழகமாகவும், மருத்துவக் கல்லூரியாகவும் இயங்கி வருகின்றது. ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு அதற்குரிய நிதி நல்கையை வழங்கி வருகிறது.

அரசு மருத்துவக் கல்லூரியாகவும், மருத்துவமனையாகவும் தமிழக அரசு அறிவிப்பு

2020 பிப்ரவரியில் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியை கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரியாகவும், மருத்துவமனையாகவும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அனைத்து வகைகளிலும் இப்போது அது ஒரு தமிழக அரசு மருத்துவக் கல்லூரியாகவே இயங்கும் தனித் தகுதியைப் பெற்றுள்ளது.

ஆனால், மருத்துவ மாணவர்களிடம் வசூலிக்கப்படும் மருத்துவப் படிப்புக்கான கட்டணம் மட்டும் பிற அரசு மருத்துவக் கல்லூரிகளைவிட 30 மடங்கு அதிகமாக வசூலிக்கப்படுவது, மிகப்பெரிய அநீதி இல்லையா?

சுயநிதி மருத்துவக் கல்லூரி அடிப்படையில், அது செயல்படுவதால், அப்படி கட்டணம் வசூலிக்கப்படுவதாக தமிழக அரசின் கூற்று நிச்சயம் ஏற்கத்தக்கதல்ல!

எப்போது அது கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரியாக தமிழக முதல்வரால் அறிவிக்கப்பட்டதோ, அதுவே தெளிவாகக் கூறும்; பல அரசு மருத்துவக் கல்லூரிகளைப் போன்று இதுவும் ஒன்றுதான் என்பதை சட்டபூர்வமாகத் தெளிவுபடுத்தும் நிலை ஏற்பட்டுவிட்டதே!

மிகப்பெரிய சமூக அநீதி அல்லவா?

இதன் பின்னர் இங்கு படிக்கும் மருத்துவ மாணவர்களுக்கு இப்படி ஒரு பெருந்தொகை, அதுவும் எளிய குடும்பத்திலிருந்து மருத்துவக் கனவை நனவாக்கக் கடுமையாக உழைக்கும் நம் பிள்ளைகளுக்கும், பெற்றோருக்கும் இப்படி ஒரு ‘தண்டனை’ தருவது மிகப்பெரிய சமூக அநீதி அல்லவா?

2013-2014இல் அப்போது அதிகக் கட்டணம் என்று தீர்மானிக்கப்பட்டது. அதாவது, ரூ.5.54 லட்சம் என்று அறிவிக்கப்பட்டது.

இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மாணவர்கள் தொடுத்த வழக்கில், உச்ச நீதிமன்றம் தமிழ்நாடு அரசு நியமித்த கல்விக் கட்டணம் தீர்மானிக்கும் குழு, கட்டணங்களை முடிவு செய்யட்டும் என்று 13.7.2018 அன்று ஆணையிட்டது.

‘வெந்த புண்ணில் வேலைச் சொருகு’வதாக அமைந்தது!

அத்தீர்ப்பின்படி, கல்விக் கட்டணம் தீர்மானிக்கும் குழு, தீர்மானித்த கட்டணம் ஏற்கெனவே பல்கலைக்கழகம் தீர்மானித்த கட்டணங்கள் அடிப்படையிலேயே இருந்தது! இது ‘வெந்த புண்ணில் வேலைச் சொருகு’வதாக அமைந்தது!

அரசு மருத்துவக் கல்லூரிக்கு ரூ.13 ஆயிரத்து 600 தனியார் சுயநிதிக் கல்லூரிக்கு ரூ.3.55 முதல் 4 லட்சம் ரூபாய் வரை என்று தீர்மானிக்கப்பட்டது. அண்ணாமலைப் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரி கல்விக் கட்டணமோ ரூ.5 லட்சத்து 44 ஆயிரத்து 370 என்று தீர்மானிக்கப்பட்டது! என்னே விசித்திரமான கொடுமை!

மருத்துவ முதுநிலைப் படிப்புக்கு இதே ஆண்டுக்கு அரசு மருத்துவக் கல்லூரியில் ரூ.30 ஆயிரம், தனியார் சுயநிதிக் கல்லூரியில் ரூ.2 லட்சம் முதல் ரூ.3.50 லட்சம் வரை என்று தீர்மானிக்கப்பட்டது; ஆனால், ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரிக்கு ரூ.9 லட்சத்து 60 ஆயிரம் என்று தீர்மானிக்கப்பட்டது கொடுமையிலும் கொடுமை அல்லவா?

இதேபோன்று, பல் மருத்துவப் படிப்புக்கும் பாரபட்சமான அதீதமான கட்டணங்கள் என்று முடிவு செய்து, அரசு கமிட்டி அறிவித்தது!

இறுதித் தீர்ப்பு வரும்வரை கூடுதலாக பணம் ஏதும் வசூலிக்கக் கூடாது!

இந்தக் கட்டண உயர்வை எதிர்த்து பாதிக்கப்பட்டவர்கள் மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்ட நிலையில், உச்ச நீதிமன்றம் இந்தக் கல்லூரிக்கு விதிக்கப்பட்ட கட்டணம் நியாயமற்றது என்று அழுத்தமாகக் கூறியுள்ளது.

இறுதித் தீர்ப்பு வரும்வரை, தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்குத் தீர்மானிக்கப்பட்ட அதே கட்டணத்தை ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரிக்கும் தீர்மானித்ததோடு, இறுதி தீர்ப்பு வரும்வரை கூடுதலாகப் பணம் ஏதும் வசூலிக்கக் கூடாது என்றும் ஆணையிட்டது!

அத்துடன், கூடுதலாக வசூலிக்கப்பட்டிருப்பின், அத்தொகையினை மாணவர்களுக்கு நிர்வாகம் திருப்பித் தரவேண்டும் என்றும் கட்டளை பிறப்பித்தது!

இறுதியாக நவம்பர் 6, 2020 (6.11.2020) உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி, ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்குப் புதிய கட்டணங்களைத் தீர்மானிக்க, மாணவர்கள் உயர் நீதிமன்றத்தில் மூன்று வாரங்களுக்குள் மனு செய்ய வேண்டுமென்று உத்தரவிட்டுள்ளது. உயர் நீதிமன்றம் நிர்ணயிக்கும் கட்டணமே இறுதியானது என்று தீர்ப்புக் கூறியது.

மாணவர்களை அச்சுறுத்தும் நிலை வேதனையானது!

ஆனால், அண்ணாமலைப் பல்கலைக்கழக நிர்வாகம் உயர் நீதிமன்றத் தீர்ப்பு வருவதற்கு முன்பே எம்பிபிஎஸ் மாணவர்கள் ரூ.5 லட்சத்து 44 ஆயிரத்து 370, பிடிஎஸ் மாணவர்கள் ரூ.3 லட்சத்து 45 ஆயிரம், முதுநிலை மருத்துவ மாணவர்கள் ரூ.9 லட்சத்து 60 ஆயிரம், முதுநிலை எம்டிஎஸ் மாணவர்கள் ரூ.8 லட்சத்து 50 ஆயிரம் என கட்டணம் கட்டவேண்டுமென்றும் கட்டாயப்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.

அந்தக் கட்டணம் செலுத்தவில்லையெனில், கல்வியை மேற்கொண்டு தொடர முடியாது, வகுப்பறையில் அனுமதிக்க முடியாது என்று அச்சுறுத்தும் நிலை மிகவும் வேதனையான சோகப்படலம் ஆகும்!

இதனால், மாணவர்களும், பெற்றோரும் ரத்தக் கண்ணீர் விட்டுப் புலம்பும் தவிப்பு உள்ளது.

‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய’ வள்ளலார் பூமியில், உயிர் காக்கும் சேவை செய்ய விரும்புவோருக்கு இப்படி ஒரு கொடுமையா? தமிழக அரசே உடனே தலையிடுக!

தமிழக அரசு, அக்கல்லூரி மாணவர்களுக்குப் புத்தாண்டுப் பரிசாக வழங்கட்டும்!

என்றைக்கு அரசு மருத்துவக் கல்லூரியானதோ அன்று முதலே இரட்டை அளவுகோல், ‘தலைக்கு ஒரு சீயக்காய், தாடிக்கொரு சீயக்காயா?’ என்று பெரியார் கேட்பதைப்போல; இந்நிலையை மாற்ற, முதல்வரும், சுகாதாரத் துறை அமைச்சரும், தமிழக அரசும் உடனே நீதிமன்றம் ஆணையிடுவதற்கு முன்பே இந்த முரண்பாட்டைக் களைந்து, அனைவருக்கும் சம நீதி வழங்கிட ஆவன செய்ய முன்வரவேண்டும்.

மக்கள் கிளர்ச்சியாக மாற இடந்தரவேண்டாம்! இதை, தமிழக அரசு, அக்கல்லூரி மாணவர்களுக்குப் புத்தாண்டுப் பரிசாக வழங்கட்டும்! உடனே அநீதியைக் களைந்திடுக!”.

இவ்வாறு கி.வீரமணி தெரிவித்துள்ளார்.Source link