ராக்கெட்ரி படத்துக்காக வீட்டை விற்றேனா? மாதவன் விளக்கம்

8/20/2022 1:50:50 AM

சென்னை: ராக்கெட்ரி படத்துக்காக மும்பையிலுள்ள வீட்டை விற்றதாக வந்த தகவல் குறித்து நடிகர் மாதவன் விளக்கம் அளித்துள்ளார். இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை கதையாக மாதவன் நடிப்பில் உருவான படம் ராக்கெட்ரி. இந்த படத்தை இயக்கி, மாதவனே தயாரித்தும் இருந்தார். இந்த படத்தின் பட்ஜெட் அதிகமானதால் மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த தனது வீட்டை மாதவன் விற்று விட்டதாக நெட்டிசன் ஒருவர் சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்து இருந்தார். ஆனால் இப்போது அவருக்கு படத்தால் நஷ்டம் ஏற்பட்டதாகவும் இதனால் மாதவன் சோகத்தில் இருக்கிறார் என்றும் அந்த நபர் குறிப்பிட்டார்.

இதுபற்றி மாதவன் விளக்கம் அளித்தார். அவர் கூறும்போது, ‘எனது தியாகத்துக்கு தயவு செய்து அதிகமாக ஆதரவளிக்காதீர்கள். நான் எனது வீட்டையோ வேறு எதையுமோ இழக்கவில்லை. உண்மையில் ‘ராக்கெட்ரி’ சம்பந்தப்பட்டவர்கள் இந்த ஆண்டு அதிகமான வருமான வரியைப் பெருமையுடன் செலுத்த உள்ளார்கள். கடவுளின் அருளால், நாங்கள் அனைவருமே மிகச் சிறப்பான மற்றும் பெருமையான லாபத்தை ஈட்டியுள்ளோம். நான் இன்னும் எனது வீட்டில்தான் நேசத்துடன் வசிக்கிறேன்’ என்றார். படம் தனக்கு லாபம் தந்ததாக மாதவன் கூறினாலும் வினியோகஸ்தர்கள் தரப்பில் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என கூறுகிறார்கள்.

Source link