யூடியூப் மூலம் வருமானம் ஈட்டி வருகிறது இந்திய கிராமம் ஒன்று. அந்த கிராமத்தில் மட்டும் சுமார் 40 யூடியூப் சேனல்கள் உள்ளதாம். இவர்களுக்கு வீடியோ கன்டென்ட் கிரியேட் செய்வதுதான் முழுநேர வேலை எனவும் சொல்லப்பட்டுள்ளது. இந்த கிராமம் இந்தியாவில் எங்கு உள்ளது? எப்படி ஒரு கிராமமே யூடியூபர்களாக மாறி உள்ளார்கள் என்பது குறித்து பார்ப்போம்.

இன்றைய டிஜிட்டல் தொழில்நுட்ப யுகத்தில் ஸ்மார்ட்போன் வைத்துள்ள ஒவ்வொருவருமே கன்டென்ட் கிரியேட்டர்கள் தான். என்ன அந்த கன்டென்டின் உள்-அர்த்தத்தை பொறுத்துதான் அதன் ரீச் அமைந்திருக்கும். அதை சரியாக எடைபோட்டு பயன்படுத்தி வருகின்றனர் இந்திய கிராமத்தை சேர்ந்த இந்த மக்கள்.

சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் உள்ளது துள்சி கிராமம். சுமார் 3000 பேர் இங்கு வசித்து வருவதாக தெரிகிறது. இந்த கிராமத்தில் உள்ள மக்கள் அனைவரும் சோஷியல் மீடியாவில் படு ஆக்டிவாக செயல்படுவது வழக்கம் என தெரிகிறது. அதுவே அவர்களை யூடியூபர்களாக இப்போது உருவாக்கி உள்ளது. தங்கள் கன்டென்ட் மூலம் நிறைவான வருமானம் கிடைப்பதால் பெரும்பாலானவர்கள் தாங்கள் செய்து வரும் வேலையை கூட உதறி விட்டதாக தெரிகிறது. அதன் மூலம் அவர்கள் முழுநேர யூடியூபர்களாக செயல்பட்டு வருகிறார்கள்.

தொடக்கம்: இதற்கெல்லாம் தொடக்கப்புள்ளியாக பிள்ளையார் சுழி போட்டது அந்தக் கிராமத்தை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஞானேந்திர சுக்லா மற்றும் ஜெய் வர்மா எனும் அந்த இளைஞர்கள் இருவரும் தாங்கள் பார்த்து வந்த வேலைக்கு ‘குட்-பை’ சொல்லிவிட்டு, இனி நமக்கு யூடியூப் தான் எல்லாமே என பத்து ஆண்டுகளுக்கு முன்னர் களம் இறங்கியுள்ளனர்.

“நான் முன்பு 9 டூ 5 வேலை செய்து வந்தேன். நான் வேலை பார்த்து வந்த நிறுவனத்தில் அதிவேக இணைய இணைப்பு வசதி இருந்தது. அதனால் யூடியூப் பார்ப்பதை எனது வழக்கமாக்கிக் கொண்டேன். நான் திரைப்படங்களை விரும்பிப் பார்ப்பேன். 2011-12 வாக்கில் புதிய வெர்ஷனை யூடியூப் அறிமுகம் செய்தது. அப்போது யூடியூப் சேனல்களும் குறைவுதான். எனக்கு வேலையில் நாட்டமில்லை. அதனால் அதை விடுத்து யூடியூப் சேனல் தொடங்கினேன். இதுவரையில் சுமார் 250 வீடியோக்களை உருவாக்கி உள்ளோம். 1.15 லட்சம் பேர் சப்ஸ்கிரைபர்கள் எங்கள் சேனலுக்கு உள்ளனர்” என்கிறார் சுக்லா.

தங்களுக்குள் இருந்த தயக்கத்தை விரட்டி அடிக்கவும் யூடியூப் உதவியதாக அவர் தெரிவித்துள்ளார். தற்போது இந்த கிராமத்தை சேர்ந்த யூடியூபர்கள் மாதந்தோறும் முப்பது ஆயிரம் ரூபாய் வரை வருமானம் ஈட்டி வருவதாகவும் சொல்லப்பட்டுள்ளது. இந்த செய்தி ANI நியூஸ் ஏஜென்சியில் வெளியாகி உள்ளது.

“நான் எம்.எஸ்சி கெமிஸ்ட்ரி முடித்துள்ளேன். பகுதி நேர ஆசிரியராக பணியாற்றினேன். அப்போது மாதம் 12 ஆயிரம் ரூபாய் வரை ஈட்டுவேன். இப்போது அது அப்படியே இரட்டிப்பாகி உள்ளது” என ஜெய் வர்மா தெரிவித்துள்ளார்.

மகளிர் அதிகாரம்: நக்சலைட் அச்சுறுத்தல் மிகுந்த இந்த மாநிலத்தை சேர்ந்த கிராம பெண்களுக்கு நிறைய கட்டுப்பாடுகள் உள்ளதாம். ஆனால் இப்போது யூடியூப் இந்த கிராமத்தில் மகளிருக்கு அதிகாரம் அளித்து வருவதாகவும் சொல்லப்பட்டுள்ளது. அதுகுறித்து அந்த கிராமத்தை சேர்ந்த இளம் பெண்ணான பிங்கி சாஹூ தெரிவித்துள்ளது, “பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் யூடியூப் அமைந்துள்ளது.

நான் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் யூடியூபராக செயல்பட தொடங்கினேன். எங்கள் கிராமத்தில் 40 யூடியூப் சேனல் உள்ளது. இங்குள்ள அனைவரும் இதில் ஆர்வமுடன் பங்கேற்று வருகிறோம். பெரும்பாலும் எங்கள் கிராமத்தில் பெண்கள் வீட்டை விட்டு வெளிவர அனுமதி இல்லை. ஆனால் யூடியூப் மூலம் பெண்களால் கொண்டு வரப்படும் மாற்றங்கள் என்ன? நம்மால் என்னென்ன செய்ய முடியும்? போன்ற விவரங்கள் எங்கள் கிராம பெண்கள் இப்போது அறிந்து வருகிறார்கள்” என்கிறார்.

தொழில்நுட்ப வளர்ச்சியை வரம் என்றும் சொல்லலாம். சாபம் என்றும் சொல்லலாம். அது அவரவர் பயன்படுத்தும் வகையை பொறுத்து அமைந்துள்ளது. இந்த கிராமத்தினர் அதனை வரமாக பயன்படுத்தி வருகின்றனர்.Source link