யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு சேவைக் கட்டணம் விதிக்கப்படலாம் என்ற பேச்சு எழுந்த நிலையில், அது தொடர்பாக மத்திய நிதி அமைச்சகத்தின் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. யுபிஐ சேவைகளுக்கு கட்டணம் விதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியானது. இது சமூக வலைதள பக்கங்களில் விவாதப் பொருளானது.

இந்தியாவில் நொடிப் பொழுதில் டிஜிட்டல் முறையில் சாமானியர்கள் தொடங்கி அனைத்து தரப்பினரும் பணத்தை பெறவும், அனுப்பவும் உதவுகிறது யுபிஐ பேமெண்ட். இது வணிகர்கள், வாடிக்கையாளர்கள் என அனைவருக்கும் சாதகமானதாகவும் உள்ளது.

கூகுள் பே, போன் பே, அமேசான் பே, BHIM என பல்வேறு செயலிகளின் மூலம் யுபிஐ பரிவர்த்தனை மேற்கொள்ளப்படுகிறது. நாளுக்கு நாள் இதன் பயனர்கள் மற்றும் பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை கூடிக்கொண்டே வருகிறது. இதற்கு வங்கி கணக்கு மட்டுமே அடிப்படை. இந்நிலையில், யுபிஐ பரிவர்த்தனைகள் ஒவ்வொன்றுக்கும் கட்டணம் வசூலிக்கும் முன்மொழிவை இந்திய ரிசர்வ் வங்கி கொண்டு வந்ததாக சொல்லப்பட்டது. இதுதான் விவாதப் பொருளானது.

“யுபிஐ சேவைகளுக்கு கட்டணம் வசூலிக்கும் எந்தவித பரிசீலனையும் அரசிடம் இல்லை” என நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதோடு இது இந்திய பொருளாதாரம் மற்றும் மக்களுக்கு கொடுத்து வரும் ஆதாயம் குறித்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் செலவை மீட்டெடுக்க சேவை வழங்கும் நிறுவனங்கள் வேறு வழியை காண வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு யுபிஐ-க்கு அளித்து வரும் நிதியுதவி குறித்தும் நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.Source link