கடலுார்-கடலுாரில் பல்வேறு இடங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜிக்கப்பட்ட விநாயகர் சிலைகள், நேற்று மேளம் தாளம் முழங்க ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, கடலில் விஜர்சனம் செய்யப்பட்டது.

விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 31ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. குடியிருப்போர் நல்வாழ்வு சங்கங்கள், பொதுநல அமைப்புகள், இந்து முன்னணி என, கடலுார் மவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் 1,220 பெரிய அளவில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டன.மூன்றாம் நாளான நேற்று, மேள தாளம் முழங்க ஆட்டம் பாட்டத்துடன் ஊர்வலமாக சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு நீர்நிலைகளில் போலீஸ் பாதுகாப்புடன் விஜர்சனம் செய்யப்பட்டன.கடலுார் மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களில் பக்தர்கள் வழிபாடு செய்த விநாயகர் சிலைகளை தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சிற்கு, நேற்று காலை முதல் லாரி, மினி லாரி, டிராக்டர் போன்ற வாகனங்களில் பக்தர்கள் கொண்டு வந்தனர். கடற்கரையில் விநாயகர் சிலைக்கு பூஜைகள் செய்து, பின், சிலை கரைப்பு குழுவினர் மூலம் கடலில் விஜர்சனம் செய்யப்பட்டன.நெல்லிக்குப்பம், பண்ருட்டி, கண்டரக்கோட்டை, முத்தாண்டிக்குப்பம் பகுதிகள் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் இருந்தும் பக்தர்கள் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்து வந்து கடலுார் கடலில் கரைத்தனர். வீடுகளில் வைத்து வழிபட்ட சிலைகளையும் கடலில் கரைத்தனர்.

போலீஸ் பாதுகாப்பு

விநாயகர் சிலை ஊர்வலத்தில் அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் இருக்க எஸ்.பி., சக்திகணேசன் உத்தரவின் பேரில் டி.எஸ்.பி., கரிகால் பாரி சங்கர் தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, சிலைகளை கரைக்க வரும்போது பீச்ரோடு வழியாக வரவும், கரைத்து முடித்த பின்னர் புதுப்பாளையம் மெயின்ரோடு வழியாக செல்லவும் போலீசார் ஏற்பாடு செய்து இருந்தனர்.பக்தர்கள் கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடற்கரையோரம் சவுக்கு கட்டைகளால் தடுப்பு வேலி அமைக்கப்பட்டிருந்தது. போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மாவட்டத்தில் கடலுார், சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மட்டும் 1,100 விநாயகர் சிலைகள் விஜர்சனம் செய்யப்பட்டன.மங்கலம்பேட்டை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பொது இடங்களில் வைத்து வழிபட்ட விநாயகர் சிலைகள் அனைத்தும் நாளை கடலுார் சில்வர் பீச்சில் கரைப்பதற்காக ஊர்வலமாக எடுத்து வரப்படுகிறது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Source link