பொள்ளாச்சியை அடுத்த பில்சின்னாம்பாளையத்தை சேர்ந்த பழனிச்சாமி, சரஸ்வதி தம்பதியின் மகன்காளிமுத்து (25). இவர், பொள்ளாச்சி என்ஜிஎம் கல்லூரியில் பி.எஸ்சி. கணினி அறிவியல் படித்துள்ளார்.

இவர் எழுதிய ‘தனித்திருக்கும் அரளிகளின் மதியம்’ எனும் தலைப்பிலான கவிதை தொகுப்புக்கு, சாகித்ய அகாடமியின் யுவபுரஸ்கார் விருது கிடைத்துள்ளது.

இதுகுறித்து கவிஞர் காளிமுத்து கூறும்போது, “அறிவுச்சோலை கல்வி விழிப்புணர்வு மையத்தின் நிறுவனர் அம்சப்ரியாவுடன் இணைந்து, பில்சின்னாம்பாளையத்தில் சமூகப் பணிகளில்ஈடுபட்டு வருகிறேன். அப்போது,பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின்தொடர்பு கிடைத்தது. இலக்கிய வட்டத்தை சேர்ந்தவர்கள், என்னை போன்ற பல இளம் படைப்பாளிகளுக்கு ஊக்கமளித்து வருகின்றனர்.

பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தை சேர்ந்தவர்கள்எனது எழுத்தை ஊக்குவித்தனர். தற்போது, ‘தனித்திருக்கும் அரளிகளின் மதியம்’ என்ற நவீன கவிதை நூலை வெளியிட்டுள்ளேன். இதில், கிராமம், அகம், புறம் வாழ்க்கை சார்ந்த அனைத்து பதிவுகளும் உள்ளன. சாகித்ய அகாடமி விருதுக்காக விண்ணப்பித்திருந்தேன்.

எனது கவிதை தேர்வு செய்யப்பட்டு யுவபுரஸ்கார் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டதாக அறிவிப்பு வந்தது, மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. மேலும் பல படைப்புகளை எழுத எனக்கு ஊக்கமளித்துள்ளது” என்றார்.Source link