மத்திய அரசின் சமூக நீதி – அதிகாரமளித்தல் அமைச்சகம், மாற்றுத்திறனாளிகளை மேம்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கான தேசிய விருதுகளுக்கு விண்ணப்பங்களையும் பரிந்துரைகளையும் ஆகஸ்ட் 28-க்குள் இணையவழியில் அனுப்புமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

கடந்த 2021-க்கும் நடப்பாண்டுக்கும் இணைத்து எதிர்வரும் டிசம்பர் 3 அன்று சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தில் இவ்விருதுகள் வழங்கப்படவுள்ளன. மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டில் சிறப்பாகப் பணிபுரியும் மாநில அரசுகள், மாவட்ட நிர்வாகங்கள், அரசு சாரா அமைப்புகள் என 8 பிரிவுகளில் 10 விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சாதனை புரிந்த மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு விருதுகள் தனி.

கூடுதல் அங்கீகாரம் தேவை: மாற்றுத்திறனாளிகள் மேம்பாடு – அதிகாரமளித்தல் தொடர்பாகத் தமிழ்நாடு அரசின் திட்டங்களுக்கும் நடவடிக்கைகளுக்கும் அதன் நோக்கத்தை எட்டுவதற்கு, தொண்டு நிறுவனங்களும் தன்னார்வலர்களும் பெரும் பங்காற்றிவருகின்றனர். ஆனால் அவர்களில் அரசின் பாராட்டு அங்கீகாரங்களைப் பெறுபவர்களின் எண்ணிக்கை மிகவும் சொற்பமானது.

விருதுகள் அதிகரிக்கப்பட வேண்டும்: மாற்றுத்திறனாளிகள் நலனுக்காகச் சிறப்பாகப் பணிபுரிந்த சமூகப் பணியாளர், மருத்துவர், தொண்டு நிறுவனம், வேலைவாய்ப்பு அளித்த தனியார் நிறுவனம் ஆகியோரில் தலா ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டு, சுதந்திர நாளில் தமிழக முதல்வரின் கரங்களால் விருதளித்துப் பாராட்டப்படுகிறது. 10 கிராம் தங்கப் பதக்கமும் சான்றிதழும் அடங்கிய இந்த விருதுகளே, தற்போது இது தொடர்பில் தமிழ்நாடு அரசால் அளிக்கப்படும் மதிப்பிற்குரிய விருதுகளாக இருந்துவருகின்றன.

ஆயிரக்கணக்கானவர்கள் மனமுவந்து சேவைப் பணியாற்றும் நிலையில், தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் என தலா ஒருவருக்கு மட்டுமே மாநில அளவில் இந்த விருதுகள் வழங்கப்படுவது, அவர்களைப் போதுமான அளவில் பிரதிநிதித்துவப்படுத்தாது என்ற கருத்து அது சார்ந்து சேவை புரிந்துவருபவர்களிடையே நிலவிவருகிறது.

இவ்விருதுகளை மண்டல அளவில் ஒருவருக்கு எனத் தேர்வுசெய்து வழங்கினால், மாற்றுத்திறனாளிகளுக்கான சேவைப் பணியை மேலும் ஊக்கப்படுத்துவதாக அமையும். இதன் மூலம், மேலும் பல தன்னார்வலர்களை உருவாக்கிட முடியும்.

சமீபத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்ற வகையில் கட்டிடங்களை உருவாக்கும் அரசு – தனியார் நிறுவனங்களுக்குச் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தன்று 10 கிராம் தங்கம், சான்றிதழுடன் கூடிய விருது வழங்கப்போவதாகத் தமிழக அரசு அறிவித்திருப்பது பாராட்டுக்குரியது.Source link