மிகவும் பின்தங்கிய ஒரு மாவட்டத்தில், எங்கோ ஒரு மூலையில் இருக்கும் அரசுப் பள்ளியிலேயே மாணவர்களிடம் எளிதாக போதைப்பொருள் கிடைக்கும் நிலை இருக்கும்போது, சென்னை போன்ற பெருநகரங்களின் நிலையை எண்ணிப் பார்த்தால் பேரச்சமாக இருக்கிறது.

போதைப்பொருட்களைக் கொண்டாடும் நிலைக்கு ஒரு சமூகமாக அதன் மீது கொண்டிருக்கும் மென்போக்கு ஒரு முக்கியமான காரணம். ஒருபுறம் திரைப்படங்களிலும் ஊடகங்களிலும் போதைப்பொருட்களைக் கொண்டாடிக்கொண்டே, மறுபுறம் அதற்கு அடிமையானவர்களை அருவருப்புடனும் களங்கமாகவும் பார்க்கும் இந்தச் சமூக முரண்தான் இந்தப் பிரச்சினையின் ஆழத்தைப் புரிந்துகொள்வதிலிருந்து நம்மைத் தடுக்கிறது.

இப்போதும்கூடப் பெருவாரியான போதைப்பொருட்களின் பழக்கத்தை நாம் பிரச்சாரங்கள் வாயிலாகவே எதிர்கொள்கிறோம். அதற்கான தெளிவான, நுணுக்கமான, ஆழ்ந்த திட்டமிடல்கள் நம்மிடம் இல்லை.

என்ன செய்யலாம்? – ஒவ்வொரு பள்ளியிலும் போதைப்பொருட்கள் பயன்படுத்துவதைக் கண்காணிக்கும் குழுவை ஒத்த சிந்தனையுள்ள மாணவர்களைக் கொண்டே ஏற்படுத்த வேண்டும், அதற்குத் தேவையான பயிற்சிகளை அவர்களுக்கு அளிக்க வேண்டும்.

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் வெளிப்படையாக உரையாட வேண்டும். அவர்களிடம் தெரியும் மாற்றங்களைத் தொடக்கத்திலேயே கண்டறிந்து, அதை அலட்சியப்படுத்தாமல் முறையான உதவியைப் பெற வேண்டும்.

மாபெரும் சமூகப் பிரச்சினையாக உருவாகிக்கொண்டிருக்கும் இதில் மாணவர்களும் இளைஞர்களும் ஒருவகையில் பாதிக்கப்பட்டவர்களே. அதனால், இது அவர்களின் தனிப்பட்ட பிரச்சினை மட்டுமல்ல, ஒரு சமூகப் பிரச்சினை என்பதை உணர்ந்துகொண்டு அவர்களை மீட்டெடுப்பதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும்.

> இது, மனநல மருத்துவர் சிவபாலன் இளங்கோவன் எழுதிய, இந்து தமிழ் திசை ப்ரீமியம் கட்டுரையின் ஒரு பகுதி. தினமும் பயனுள்ள ப்ரீமியம் கட்டுரைகளை வாசிக்க > ப்ரீமியம் கட்டுரைகள்Source link