மதுரை: தூய்மைப் பணியாளர்கள் வராததால் மதுரை மாநகராட்சி சுற்றுச்சூழல் பூங்காவில் ‘வாக்கிங்’ சென்ற பொதுமக்களே தற்போது குவியும் குப்பைகளை தினசரி தூய்மை செய்து வருகிறார்கள். அந்த வார்டு கவுன்சிலரின் இந்த முயற்சிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

மதுரை மாநகராட்சி அலுவலகம் அருகே சுற்றுச்சூழல் பூங்கா அமைந்துள்ளது. இந்தப் பூங்காவில் தினமும் காலை நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் நடைப்பயிற்சி செல்வார்கள். காலையில் ‘வாக்கிங்’ செல்ல இலவசமாக பொதுமக்கள் அனுமதிக்கப்படுகின்றனர். மாலை நேரத்தில் பூங்காவில் பொழுதுபோக்கு கட்டணம் அடிப்படையில் பொதுமக்கள் அனுமதிக்கப்படுகின்றனர். தற்போது மாலையில் சுற்றுச்சூழல் பூங்காவில் பொழுதுப்போக்கு நிகழ்ச்சிகள் எதுவும் நடக்காததால் பொதுமக்கள் வருவதில்லை.

இதனால், வாக்கிங் செல்வோர் மட்டுமே காலையில் வந்து செல்கின்றனர். காலையில் வாக்கிங் செல்வோர் உடல் ஆரோக்கியத்திற்காக மாநகராட்சி சுற்றுச்சூழல் பூங்காவில் யோகா, தியானம், உடற்பயிற்சி உபகரணங்கள் வைத்துள்ளனர்.

மாநகராட்சியில் தற்போது தூய்மைப் பணியாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால், பூங்காவில் பணிபுரிந்த 15-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் வேறு இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இதனால், பூங்கா வளாகம், நடைப்பாதைகளில் குப்பைகள் குவிந்து மரக்கிளைகள், இலைகள் உதிர்ந்து விழுந்து கிடக்கின்றன. பாம்புகள், பூச்சிகள் நடைபாதைகளில் கிடக்கும் இலைகள், குப்பைகளில் மறைந்துள்ளன. நடைப்பயிற்சி செய்வோர் சத்தம் கேட்டு அவை ஊர்ந்து சென்றுவிடுகின்றன.

குப்பை மையமாகவும், பாம்பு, பூச்சிகள் தொல்லையாலும் தற்போது சுற்றுச்சூழல் பூங்காவிற்கு வாக்கிங் வருவோர் எண்ணிக்கை குறைந்துள்ளது. மாநகராட்சி வார்டுகளில் உள்ள குப்பைகளை அள்ளுவதே தூய்மைப் பணியாளர்களுக்கு சவாலாக இருப்பதால் அவர்கள் வருவாய் இல்லாத இந்த சுற்றுச்சூழல் பூங்கா பராமரிப்பில் போதிய கவனம் செலுத்தவில்லை.

இதனால், 31-வது வார்டு கவுன்சிலர் முருகன் கடந்த சில நாளாக பூங்காவில் தினசரி வாக்கிங் செல்வோரை ஒருங்கிணைத்து அவர்களை வைத்து பூங்காவை பராமரிக்கத் தொடங்கி உள்ளார். அவர், வாக்கிங் செல்வோரிடம் அன்றாடம் வந்து “நாம் பயன்படுத்தும் இடத்தை நாமேதான் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும், இந்த பணியை நாமே தினசரி செய்தால் சுற்றுச்சூழல் பூங்கா தூய்மையாக இருக்கும்” என்று வாக்கிங் செல்வோரை அழைத்து பேசினார்.

கவுன்சிலரின் இந்த வேண்டுகோளை ஏற்று தற்போது பூங்காவில் வாக்கிங் செல்வோர் தினசரி நடைபாதை, பூங்கா வளாகங்களில் கிடக்கும் குப்பைகளை அள்ளி சுத்தம் செய்கின்றனர். கவுன்சிலின் இந்த முயற்சிக்கு பொதுமக்கள் மத்தியில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.Source link