பெங்களுரூ: பள்ளிச் சிறுமிகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக பதிவான புகாரில் கைது செய்யப்பட்ட கர்நாடக மடாதிபதியை 4 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க கீழமை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள ப்ரிஹான் மடத்தின் மடாதிபதி சிவமூர்த்தி முருக சரணரு. இவர் மடத்திற்கு உட்பட்ட பள்ளியில் படித்த இரண்டு மாணவிகளை தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்ததாக சிறுமிகள் அளித்த புகாரின் அடிப்படையில் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து வியாழக்கிழமை இரவு அவர் கைது செய்யப்பட்டார். இதற்கிடையில், திடீரென தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறியதால் வெள்ளிக்கிழமை காலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில், சித்ரதுர்காவிலிருந்த மடாதிபதியை சக்கர நாற்காலியில் வைத்து அழைத்து வந்த போலீசார் வெள்ளிக்கிழமை மாலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். தொடர்ந்து மடாதிபதியை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரினர்.

இதனைத் தொடர்ந்து, மடாதிபதியை நான்கு நாட்களில் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கிய நீதிமன்றம், சிறையில் இருந்து மடாதிபதி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டத்தை நீதிமன்றத்திற்கு தெரிவிக்காதது குறித்து போலீசாருக்கு கண்டனம் தெரிவித்தது. மேலும், மடாதிபதியின் மருத்துவ அறிக்கையைத் தாக்கல் செய்யும்படி சிறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.

காவலில் இருக்கும்போது மடாதிபதிக்கு மருத்துவ சேவையை உறுதி செய்ய வேண்டும் என்றும், அவரின் உடல்நிலை மோசமடைந்தால் மட்டுமே மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தனர். இந்த விவகாரத்தில் மற்றொரு குற்றவாளியான ரேஷ்மி என்பவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தலைமறைவாக உள்ள மற்ற மூன்று பேரை போலீசார் தேடிவருகின்றனர்.

முன்னதாக, சிவமூர்த்தி முருக சரணரு கர்நாடகாவில் உள்ள முருக மடத்தின் தலைவராவார். இவர் மீது இரண்டு சிறுமிகள் பாலியல் வன்புணர்வு புகார் அளித்ததைத் தொடர்ந்து 6 நாட்களுக்கு முன்பு போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டது. கர்நாடகாவில் சமூக அமைப்புகளின் தொடர் போராட்டங்களை அடுத்து வியாழக்கிழமை இரவு 10 மணிக்கு மேல் மடாதிபதி கைது செய்யப்பட்டார்.Source link