பெரியகுளம்: அதிமுக பொதுக்குழு செல்லாது. எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்தது செல்லாது; மீண்டும் பழைய நிலையே தொடர வேண்டுமென சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் உற்சாகத்தில் உள்ளனர். ஏற்கனவே சென்னையில் தனது ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் நேற்று முன்தினம் அவரது சொந்த ஊரான தேனி மாவட்டம், பெரியகுளத்திற்கு வருகை தந்தார். அப்போது அவரை சில ஆதரவாளர்கள் சந்தித்து பேசினார்.

நேற்று பெரியகுளம் அருகே கைலாசபட்டியில் உள்ள பண்ணை வீட்டில் தங்கியுள்ள ஓபிஎஸ்சை, அரவக்குறிச்சி முன்னாள் எம்எல்ஏ பி.எஸ்‌.கந்தசாமி, கரூர் மாவட்ட விவசாய அணி செயலாளர் இளங்கோ, அரவக்குறிச்சி அம்மா பேரவை நகர செயலாளர் மகாலிங்கம், தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாசறை செயலாளர் முத்துராமலிங்கம் மற்றும் சில முக்கிய பிரமுகர்கள் சந்தித்து ஆலோசனை நடத்தினர். நேற்று காலை முதல் இரவு வரை மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, சென்னை, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த மாவட்ட, ஒன்றிய, நகர கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என 200க்கும் மேற்பட்டோர் ஓபிஎஸ்சை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்த்தனர்.

Source link