புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் மெரினா, பெசன்ட்நகர் உள்ளிட்ட கடற்கரைகளுக்கு புத்தாண்டு கொண்டாட யாரும் வர வேண்டாம் என்றும் மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் எச்சரித்துள்ளார்.

ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் வகையில் ஆண்டுதோறும் டிச.31-ம் தேதி இரவு மெரினா கடற்கரை, பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கானோர் திரள்வார்கள். நட்சத்திர ஓட்டல்கள், கேளிக்கைவிடுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டம் களை கட்டும். நடன நிகழ்ச்சிகளும் நடைபெறும். காவல் ஆணையரும் மெரினா கடற்கரை காந்தி சிலை அருகே கேக் வெட்டி பொது மக்களுக்கு வழங்குவார். இந்த ஆண்டு கரோனா தொற்றை தடுக்கும்வகையில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை, பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது.

இந்நிலையில், நட்சத்திர ஓட்டல்கள், கேளிக்கை விடுதிகளில் உள்ள பார்களை, இன்று இரவு 10 மணிக்கு மேல் திறக்கக் கூடாது என சென்னை பெருநகர காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் எச்சரித்துள்ளார். மேலும், கடற்கரை சாலைகளில் போக்குவரத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் அனைத்து மேம்பாலங்களும் நள்ளிரவில் மூடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புத்தாண்டை முன்னிட்டு பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் 10 ஆயிரம் போலீஸார் ஈடுபட்டுள்ளனர். மேலும் 300 இடங்களில் வாகன சோதனை நடைபெற உள்ளது.

தடையை மீறி புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சாலைகளில் கொண்டாட்டம் மற்றும் வாகன பந்தயங்கள் நடந்தால் வாகனம் பறிமுதல் செய்யப்படும். புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்கிறோம் என்ற பெயரில் பெண்களிடம் அத்து மீறினால் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் ஆணையர் எச்சரித்துள்ளார்.

மேலும் டிச.31 காலை 6 மணி முதல் ஜன.2-ம் தேதி காலை 6 மணி வரை பொதுமக்கள் கூடுவதற்கு தடை விதித்து பெசன்ட் நகர் கடற்கரையில் எச்சரிக்கை பேனர் வைக்கப்பட்டுள்ளது.



Source link