புதுச்சேரியில் காங்கிரஸ் கூட்டணியிலிருந்து விலக முடிவு எடுக்க உள்ளதைப் புத்தாண்டு வாழ்த்து மூலம் திமுக தெரிவித்துள்ளது.

புதுச்சேரி ஆளும் காங்கிரஸின் கூட்டணியான திமுக சில மாதங்களாக விலகல் போக்கைக் கடைப்பிடித்து வருகிறது. ஆட்சியைக் கடுமையாக விமர்சிப்பதுடன், காங்கிரஸ் நடத்தும் கூட்டங்கள், போராட்டங்களைப் பங்கேற்காமல் தவிர்த்து வருகிறது.

இந்நிலையில், புதுவை தெற்கு மாநில திமுக அமைப்பாளர் சிவா எம்எல்ஏ இன்று (டிச. 31) வெளியிட்டுள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தி:

“புத்தாண்டில் நாம் எடுக்கும் உறுதிமொழிகளில், நல்லோருடனும், நமது வளர்ச்சிக்கு உறுதியாக இருந்து உதவுபவர்களுடனும் நட்பு பாராட்ட வேண்டும் என்பது முக்கியமான ஒன்றாக உள்ளது. கடந்த காலங்களில் நாம் கொண்ட நட்பு நம்மைத் தவறான பாதைக்கு அழைத்துச் சென்றிருக்கலாம். வரும் ஆண்டில் அதுபோன்ற தவறான பாதைக்கு அழைத்துச் சென்ற நட்புகளை எச்சரிக்கையுடன் கையாள முன்வர வேண்டும்.

தொடர்ந்து அவர்களுடனான நட்பு நமது வளர்ச்சிக்குத் தடையாகவும், தொந்தரவாகவும் இருக்கும் என்றால் அவர்களுடனான நட்பைத் துண்டித்துக் கொள்ளவும் உறுதியான முடிவை எடுக்க வேண்டும். நம்மால் நட்பு இன்றி வாழ முடியாது என்பதால் நண்பனின் வளர்ச்சிக்கு நாம் உறுதியாகவும், உறுதுணையாகவும் இருப்பதைப்போல் நமது வளர்ச்சிக்கு உறுதியாகவும், உறுதுணையாகவும் இருப்பவர்களை அடையாளம் கண்டு நட்பு கொள்ளவும் இப்புத்தாண்டில் உறுதியேற்றுச் செயல்படுவோம்”.

இவ்வாறு சிவா எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.Source link