பாஜக கூட்டணி ஆட்சி அமைப்பதே எங்கள் இலக்கு, கூட்டணிக்கட்சித் தலைவர்களின் கருத்தை கேட்டறிந்து புதுச்சேரியில் முதல்வர் வேட்பாளரை கட்சித்தலைமை அறிவிக்கும் என்று, புதுச்சேரி பாஜக மாநிலத்தலைவர் சாமிநாதன் எம்எல்ஏ தெரிவித்தார்.

புதுச்சேரி பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் சாமிநாதன் இன்று (டிச. 31) கூறியதாவது:

“மத்திய அரசு, துணைநிலை ஆளுநர் திட்டங்களைத் தடுப்பதாக முதல்வர் நாராயணசாமி பொய்யாக குற்றம்சாட்டுகிறார். ரியல் எஸ்டேட் தொழில் மூலம் சுமார் 10 ஆயிரம் கோடி அரசுக்கு வருவாயாக கிடைத்திருக்க வேண்டும். ஆனால், தனிப்பட்ட நபர்களுக்கு ஆதரவாக காங்கிரஸ் அரசு செயல்பட்டது. மதுபான கடைகளை ஏலம் விட்டிருந்தால் ஆண்டுக்கு ரூ.500 கோடி வருவாய் கிடைத்திருக்கும். கேபிள் டிவி-யில் முழுமையாக வரி வசூல் செய்திருந்தால் முழுமையாக வருவாய் கிடைத்திருக்கும். இதையெல்லாம் தங்களுக்கு சாதகமாக அரசு பயன்படுத்திக்கொண்டது.

புதுவையில் 30 தொகுதிகளிலும் தாமரை யாத்திரை நடத்தி முடித்துள்ளோம்.வரும் ஜன. 3-ம் தேதி மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷன்ரெட்டி பங்கேற்கிறார். ரோடியர் மில் திடலில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் நடிகை குஷ்புவும் பங்கேற்று பேசுகிறார்.

‘இனி ஒரு நல்லாட்சி, காங்கிரஸ் இல்லாத புதுச்சேரி’ என்ற தலைப்பில் காலை 9 மணி முதல் மதியம் ஒரு மணி வரை பொதுக்கூட்டம் நடைபெறும். பாஜக கூட்டணி ஆட்சி அமைய வேண்டும் என்பதே எங்கள் இலக்கு. கூட்டணிக்கட்சித் தலைவர்களின் கருத்தை கேட்டறிந்து புதுச்சேரியில் முதல்வர் வேட்பாளரை கட்சித்தலைமை அறிவிக்கும்.

தற்போதைய புத்தாண்டு கொண்டாட்டத்தால் ஜனவரியில் கரோனா தொற்று புதுச்சேரியில் அதிகரித்தால் முதல்வர் நாராயணசாமியே பொறுப்பு. அவர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம்”.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.Source link