திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தை இம்முறை 2 ஆண்டுகளுக்கு பிறகு மாட வீதிகளில் வாகன சேவைகளுடன் பிரம்மாண்டமாக நடத்த திருமலை திருப்பதி தேவஸ்தானம் தீர்மானித்துள்ளது. இதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

திருப்பதியில் உள்ள கோவிந்த ராஜர் இலவச சத்திரங்கள், விஷ்ணு நிவாசம், மாதவம், ஸ்ரீநிவாசம் என அனைத்து தங்கும் விடுதிகளிலும் சீரமைப்பு பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன. இதேபோன்று, மலைப்பாதையில் சாலை சீரமைப்பு பணிகள், தடுப்புச் சுவர்கள், இரும்பு தடுப்புகள் அமைப்பது போன்ற பணிகளும், திருமலையில் தங்கும் விடுதிகளில் குடிநீர், சுடுநீர் வசதிகளும் சீரமைக்கப்பட்டு வருகின்றன.

வரும் 27-ம் தேதி மாலை 5.15 முதல் 6.15 வரை பிரம்மோற்சவத்திற் கான கொடியேற்ற நிகழ்ச்சி ஆகம விதிகளின்படி நடத்தப்பட உள்ளது. முன்னதாக இம்மாதம் 20-ம் தேதி, ஏழுமலையான் கோயிலில் ஆழ்வார் திருமஞ்சன நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. 27-ம் தேதி மாலை கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவம் தொடங்குகிறது. அன்றைய தினம், மாலை ஆந்திர அரசு சார்பில் சுவாமிக்கு பட்டு வஸ்திரங்களை முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி காணிக்கையாக வழங்க உள்ளார். 28-ம் தேதி 2-ம் நாள் பிரம்மோற்சவத்தில், காலை சின்ன சேஷ வாகனம், இரவு ஹம்ச வாகனம், 29-ம் தேதி காலை சிம்ம வாகனம், இரவு முத்துப்பந்தல், 30-ம் தேதி காலை கற்பக விருட்ச வாகனம், இரவு சர்வ பூபால வாகன சேவைகள் நடைபெற உள்ளன.

இதில், 5-ம் நாள் பிரம்மோற்சவம் அக்டோபர் 1-ம் தேதி நடைபெற உள்ளது. அன்று, புரட்டாசி மாதம் 3வது சனிக்கிழமையாகும். அன்று காலை மோகினி அவதாரமும், அன்றிரவு கருட சேவையும் நடைபெறும். இதனை தொடர்ந்து அக்டோபர் 2-ம் தேதி 6-ம் நாள் பிரம்மோற்சவத்தில் காலை ஹனுமன் வாகனமும், மாலை 4 -5 மணி வரை தங்க ரத ஊர்வலமும், இரவு கஜ வாகன சேவையும் நடைபெற உள்ளது. 8-ம் நாள் காலை தேரோட்டம் நடைபெற உள்ளது. நிறைவு நாளான அக்டோபர் 5-ம் தேதி காலை 6 மணியிலிருந்து 9 மணி வரை சக்கர ஸ்நானம் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இதனை தொடர்ந்து அன்று மாலை 9-10 மணிக்குள் பிரம்மோற்சவ கொடி இறக்கப்பட்டு பிரம்மோற்சவம் நிறைவடைகிறது.Source link