தர்மபுரி:காவிரி உபரிநீர் திட்டத்தை செயல்படுத்தக்கோரி,  பாமக தலைவர் அன்புமணி எம்பி 3 நாள் பிரசார நடைபயணத்தை கடந்த 19ம் தேதி  ஒகேனக்கல்லில் தொடங்கினார். கடைசி நாளான நேற்று, கம்பைநல்லூரில் இருந்து நடைபயணம் தொடங்கிய அவர், நிருபர்களிடம் கூறியதாவது: மேட்டூர் அணையில் இருந்து இந்த ஆண்டில் இதுவரை 185 டி.எம்.சி. தண்ணீர் வீணாக கடலில் கலந்துள்ளது. வடகிழக்கு பருவமழையும் பெய்யவுள்ளதால், 250 டிஎம்சி நீர் வரை வீணாக கடலுக்கு செல்லும் வாய்ப்பு உள்ளது.

இதை தடுக்க, நீர் மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த வேண்டும். இதை செய்தாலே, தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரி, குளங்களை நிரப்பி விடலாம். இதனால் கூடுதலாக ஒரு லட்சம் ஏக்கர் சாகுபடி பரப்பளவு அதிகரிக்கும். மேட்டூர் அணையில் இருந்து வெளியேறும் உபரிநீரை சேமிக்க, கொள்ளிடம் வரை காவிரி ஆற்றில் ஒரு கிலோ மீட்டருக்கு ஒரு தடுப்பணை கட்ட வேண்டும். இவ்வாறு 50 தடுப்பணை கட்டி, தலா ஒரு டிஎம்சி வீதம் 50 டி.எம்சி தண்ணீரை சேமிக்கலாம்.  இந்த உபரிநீர் திட்டம் தொடர்பாக, ஏற்கனவே முதல்வரை சந்தித்து மனு அளித்துள்ளேன். தேவைப்பட்டால் மீண்டும் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசுவேன். இவ்வாறு அவர் கூறினார்.

Source link