புதுடெல்லி: சுகேஷ் சந்திரசேகரின் குற்ற வரலாறுகளை தெரிந்தே நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் அவருடன் பழகினார் என்று அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் மனைவியிடம் ரூ.200 கோடி மோசடி செய்ததாக இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் என்பவர், கடந்த ஆண்டு கைதுசெய்யப்பட்டார். அவருடன் தொடர்புடையதாக இந்தி நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸை அமலாக்கத் துறை விசாரித்தது. இந்த விவகாரத்தில் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் பெயரை குற்றவாளிகளின் பெயருடன் இணைந்திருந்தது அமலாக்கத்துறை.

இப்போது சுகேஷ் குற்றவாளி என்பதை தெரிந்தே நடிகை ஜாக்குலின் பணத்தின் மீதான மோகத்தால் அவருடன் பழகினார் என்று அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. ஜாக்குலின் பெர்னாண்டஸ் மீது தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிகையில், “சுகேஷ் சந்திரசேகரின் கடந்த கால குற்றங்களை நடிகை ஜாக்குலின் நன்கு அறிந்திருந்தார். லீனா மரியா பால் தான் சுகேஷின் மனைவி என்பதும் தெரிந்தே இருந்தது. இவற்றையெல்லாம் ஜாக்குலினுக்கு தெரிவித்தது அவரின் ஹேர் ஸ்டைலிஸ்ட் ஷான் என்பவர்தான். இருப்பினும், ஜாக்குலின் அவற்றை தெரிந்தே புறக்கணித்து, சுகேஷுடனான உறவைத் தொடர்ந்தார்.

மேலும் சுகேஷிடமிருந்து நிதிப் பலன்களைப் பெற்றுள்ளார். அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களும் சுகேஷ் உடனான உறவு மூலம் பணப் பலன்களை பெற்றுள்ளனர். அவர்கள் பெற்றவை அனைத்தும் சுகேஷ் செய்த குற்றத்தின் மூலம் கிடைத்தவையே. ஜாக்குலின் பெர்னாண்டஸ் சுகேஷிடம் இருந்து 5 கைக்கடிகாரங்கள், 20 நகைகள், 65 ஜோடி காலணிகள், 47 ஆடைகள், 32 பேக்குகள், 4 ஹெர்ம்ஸ் பேக்குகள், ஒன்பது ஓவியங்கள் மற்றும் ஒரு வெர்சேஸ் கிராக்கரி செட் (விலையுயர்ந்த செராமிக் பாத்திரம்) ஆகியவற்றை பெற்றுள்ளார். ஏப்ரல் 2021-ல் ஜாக்குலின் பெர்னாண்டஸின் பெற்றோருக்கு சுகேஷ் சந்திரசேகர் இரண்டு கார்களை பரிசளித்துள்ளார். அதை அவர் தனது விசாரணையின் போது வெளியிடவில்லை.

இவை மட்டுமில்லாமல், ஜாக்குலின் ரூ.7.12 கோடியும், அமெரிக்காவில் உள்ள அவரது சகோதரி ரூ.1.26 கோடியும், ஆஸ்திரேலியாவில் உள்ள அவரது சகோதரன் ரூ.15 லட்சத்தையும் சுகேஷிடம் இருந்து பெற்றுள்ளனர். இவற்றுடன் 5.71 கோடி மதிப்பிலான பரிசுகளையும் வாங்கியுள்ளனர். பணத்தின் மீதான மோகம் காரணமாக சுகேஷ் குற்றங்களை பொருட்படுத்தாமல் தெரிந்தே அவருடன் பழகி குற்றத்தின் மூலம் கிடைத்த வருமானத்தை வாங்கியுள்ளார். இவை உறுதிப்படுத்தபட்டுள்ளது.

என்றாலும் விசாரணையின்போது சுகேஷ் சந்திரசேகரின் வழக்குகள் பற்றி தனக்கு ஒருபோதும் தெரியாது என்று ஜாக்குலின் பெர்னாண்டஸ் கூறியது தவறானது. மேலும், தான் சுகேஷால் பாதிக்கப்பட்டதாக தொடர்ந்து கூறிவந்த ஜாக்குலின் விசாரணையின்போது அதை நிரூபிக்கும் வகையில் எந்த ஆதாரத்தையும் வழங்கவில்லை. விசாரணையில் இருந்து தப்பிக்க பொய்க் கதையை வெளிப்படுத்தினார் என்பது இதன்மூலம் உறுதியாகியுள்ளது. சுகேஷ் உடனான உறவை மறைக்க தனது செல்போனில் இருந்த தகவல்களை அழித்த ஜாக்குலின், தனது ஊழியர்களின் செல்போன் மூலம் சுகேஷை தொடர்புகொண்ட தரவுகளையும் மறைத்துள்ளார்” இவ்வாறு அமலாக்கத்துறை குறிப்பிட்டுள்ளது.Source link