சென்னை: உயர் நீதிமன்றம் விதித்த கெடு நேற்று முன்தினம் முடிந்த நிலையில், சென்ன ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகம் உடைக்கப்பட்ட சம்பவத்தில் ஆதாரங்கள் அழிக்கப்படும் என்பதால், கட்சி தலைமை தொண்டர்கள் யாரும் அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வர வேண்டாம் என்று எடப்பாடி பழனிசாமி அணி திடீர் தடை விதித்துள்ளது. இதனால் அதிமுக தலைமை திறக்கப்பட்டும் வெறிச்சோடி காணப்பட்டது.

ெசன்னை வானரகத்தில், எடப்பாடி அணியினர் கடந்த மாதம் 11ம் தேதி அதிமுக சிறப்பு பொதுக்குழு கூட்டத்தை கூட்டினர். இதில், எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். அன்றைய தினம் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் சென்றபோது, இரு தரப்பினரும் கடுமையாக மோதிக் கொண்டனர். இதில், சாலையில் நிறுத்தப்பட்ட கார்கள் மற்றும் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டது. மேலும், 3 எம்எல்ஏக்கள் உட்பட 45 பேர் படுகாயமடைந்தனர்.

இதையடுத்து சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் வகையில், மயிலாப்பூர் வருவாய் துறையினர் அதிமுக தலைமை அலுவலகத்தை பூட்டி சீல் வைத்தனர். இது தொடர்பாக, எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் என 400 பேர் மீது ராயப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதற்கிடையே அதிமுக அலுவலகத்துக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அதிமுக அலுவலக சீலை அகற்றி சாவியை எடப்பாடி பழனிசாமி அணியினரிடம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது. அதேநேரம், எந்த வித அசம்பாவிதங்களும் நடைபெறாமல் தடுக்கும் வகையில் ஒரு மாதம் அதாவது நேற்று முன்தினம் வரை கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு அதிமுகவினர் யாரும் செல்லக் கூடாது என்று நீதிமன்றம் தடை விதித்தது.

இந்த நிலையில், நீதிமன்றம் விதித்த காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்ததால் நேற்று எடப்பாடி அணியினர் ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்துக்கு வருவார்கள் என்ற எதிர்பார்க்கப்பட்டது. அதேநேரம், சென்னை உயர் நீதிமன்றம் சில நாட்களுக்கு முன் அளித்த மற்றொரு தீர்ப்பில் ஜூன் 23ம் தேதிக்கு முந்தைய நிலையே அதிமுகவில் தொடர வேண்டும் என்று கூறி உள்ளது. அதன்படி ஓ.பன்னீர்செல்வம் கட்சியின் ஒருங்கிணைப்பாளராகவே இன்னும் நீடிக்கிறார். அதனால் எடப்பாடி அணியினர் கட்சி தலைமை அலுவலகம் வந்தால், ஓபிஎஸ் ஆதரவாளர்களும் நேற்று கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு வருவார்கள் என்று கூறப்பட்டது.ஆனால், அதிமுக தலைமை அலுவலகம் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் உடைக்கப்பட்டு ஆவணங்கள் அள்ளி சென்றதாக அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதன்படி போலீசார் இதுவரை அதிமுக அலுவலகத்திற்குள் சென்ற விசாரணை நடத்த வில்லை. ஏன் என்றால் நீதிமன்றம் தடை உத்தரவு இருந்ததால் விசாரணை தடைபட்டது.

அதேநேரம், நீதிமன்ற கெடு நேற்றுடன் முடிவடைந்த நிலையில் அதிமுகவின் எடப்பாடி மற்றும் ஓபிஎஸ் ஆகிய இரண்டு அணியினரும் இன்று அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. அப்படி வந்தால் மீண்டும் கடந்த மாதம் 11ம் தேதி போல் மீண்டும் கலவரம் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளதாக கருதி, சென்னை மாநகர கூடுதல் கமிஷனர் பிரேம் அனந்த் சின்ஹா உத்தரவுப்படி ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு 2 உதவி கமிஷனர்கள் தலைமையில் 100 போலீசார் பாதுகாப்பு போடப்பட்டது. அதன்படி போலீசாரும் சுழற்சி முறையில் அதிமுக அலுவலகத்திற்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

நீதிமன்ற தடை விலகிய நிலையில், அலுவலகம் உடைக்கப்பட்ட சம்பவத்தை கருத்தில் கொண்டு அதிமுக தலைமை அலுவலகத்திற்கு கட்சியினர் யாரும் செல்ல வேண்டாம் என்று அனைத்து கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கு தலைமை கழக நிர்வாகிகள் மூலம் வாய் மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்த உத்தரவில், அலுவலகம் உடைக்கப்பட்ட விவகாரம் குறித்து ராயப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அலுவலகம் தாக்கப்பட்ட வழக்கு தொடர்பாக தலைமை அலுவலகத்திற்குள் போலீசார் எப்போது வேண்டும் என்றாலும் விசாரணை நடத்தலாம் என்று கூறப்படுகிறது.

அலுவலகத்திற்குள் உடைக்கப்பட்ட பொருட்கள் மற்றும் அனைத்து ஆதாரங்கள் சிதறி கிடக்கிறது. எனவே கடசியினர் மற்றும் தொண்டர்கள் அலுவலகத்திற்குள் தற்போது சென்றால், வழக்கு தொடர்பான ஆதாரங்கள் அழிக்கப்பட அதிகளவில் வாய்ப்பு உள்ளதாக அதிமுக மேலிடம் கருதுகின்றது. எனவே வழக்கு விசாரணை முடியும் வரை அதிமுக தலைமை அலுவலகத்திற்கு கட்சியின் மறு உத்தரவு வரும் வரை யாரும் செல்ல வேண்டாம் என்று எடப்பாடி பழனிசாமி அணி உத்தரவிட்டுள்ளதாக அதிமுக மூத்த நிர்வாகிகள் சிலர் கூறினர்.
அதேநேரம் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் நேற்று சென்னையில் இல்லை. இருவரும் தனது சொந்த ஊர்களில் உள்ளனர்.

எனவே நீதிமன்ற தடை உத்தரவு முடிவுக்கு வந்தும் அதிமுகவினர் யாரும் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு செல்லவில்லை. அதேநேரம், கட்சியின் தலைமை அலுவலகத்தின் நுழைவு வாயில் பூட்டு மட்டும் திறக்கப்பட்டது. திறக்கப்பட்ட சிறிது நேரத்தில் நுழைவு வாயிலை போலீசார் மீண்டும் பூட்டினர். எந்த நேரத்திலும் எடப்பாடி மற்றும் ஓபிஎஸ் அணியினர் அதிமுக தலைமை கழகத்திற்கு வருவார்கள் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அலுவலகம் முன்பு தடுப்புகள் அமைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Source link