திருமங்கலத்தில் ரூ.60 கோடி மதிப்பீட்டில் அரசு ஹோமியோபதி மருத்துவக் கல்லூரிக்கு புதிய கட்டடம் கட்டப்படும் என்றும், நீட் தேர்வு விலக்கில் உறுதியாக உள்ளதாகவும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.

திருமங்கலத்தில் அமைந்துள்ள அரசு ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி கட்டடங்களை தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தார். தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியது:

கடந்த 1975 ஆம் ஆண்டு கீழ்பாக்கத்தில் அரசு ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்டது. தொடர்ந்து திருமங்கலத்தில் ஏழு ஏக்கர் பரப்பளவில் 1982 ஆம் ஆண்டு அரசு ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்டது.

முதலில் மூன்றை ஆண்டுகள் டிப்ளமோ வகுப்பாக தொடங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து 1985 ஆம் ஆண்டு ஹோமியோபதி பட்டப்படிப்பு தரம் உயர்த்தப்பட்டது. தற்போது 300 மாணவ, மாணவிகள் இந்த கல்லூரியில் படித்து வருகின்றனர். 

திருமங்கலத்தில் 7 ஏக்கர் பரப்பளவில் இந்த கல்லூரி அமைந்துள்ளது. கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டபோது கல்லூரி தாழ்வான பகுதியாக மாறியது உள்ளது. இதனால் மழைக்காலங்களில் மாதக்கணக்கில் மழைநீர் தேங்கி நிற்பதால் இங்கு வகுப்பறைகள் ஆய்வகங்கள் அனைத்தும் பாதிக்கப்பட்டு பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. அதனால் இந்த ஆண்டு மாணவர்கள் ஆய்வகத்தில் படித்துக் கொண்டுள்ளனர். கடந்த முறை மதுரைக்கு வந்த போது கல்லூரி கட்டடங்களை சீரமைக்க பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர். 

இதனைத் தொடர்ந்து தற்போது ஆய்வு செய்ய வந்துள்ளேன். கல்லூரி பகுதியில் கால்வாய் அமைக்கும் பட்சத்தில் கல்லூரியில் தண்ணீர் தேங்காது என நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த இடத்தில் புதிய கட்டடங்கள் கட்ட  மாவட்ட ஆட்சியர் தலைமையில் தியாகராஜர் பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த பொறியியல் வல்லுநர்கள் கொண்டு ஆய்வு செய்யப்பட்டு அதற்கான அறிக்கையை சமர்ப்பிப்பார்.

இதையும் படிக்கலாம் | தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் பரிந்துரைந்தது என்ன தெரியுமா? 

ஆய்வறிக்கையின்படி மழை காலங்களில் தண்ணீர் தேங்கி கட்டடத்திற்கு சேதம் ஏற்படும் என தெரிய வந்தால், வேறு இடத்திற்கு கல்லூரியை கல்லூரி நிர்வாகம், மாணவர் பிரதிநிதிகள் ஆகியோரின் ஒப்புதல் பெற்று வேறு இடத்திற்கு மாற்ற முடிவு செய்யப்படும். அந்த அறிக்கையின் படி ரூ.60 கோடி மதிப்பீட்டில் அரசு ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி புதிய கட்டடம் கட்டப்படும் சுமார் இரண்டு ஆண்டுகளுக்குள் இந்த பணிகள் நிறைவடைந்து பயன்பாட்டுக்கு வரும்.

அதுவரை மாணவர்களின் கல்வி பாதிக்காத வகையில் அருகில் உள்ள விருதுநகர், திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள மருத்துவக் கல்லூரியில் இடம் கேட்க இந்திய மருத்துவ கவுன்சிலிங் ஆணையரிடம் தெரிவித்துள்ளேன். 

மழைக்காலங்களில் பொதுப்பணித்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்துடன் சேர்ந்து நோய் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

தமிழக அரசு நீட் தேர்வு விலக்கில் உறுதியாக உள்ளது. இது தொடர்பாக உள்துறை அமைச்சகம் சில கேள்விகள் கேட்டுள்ளனர். இது தொடர்பாக தமிழக அரசு சார்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், அரசு மருத்துவமனைகளில் மருந்துகள் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கின்றது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். 

பேட்டியின் போது மதுரை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் மணிமாறன், நகராட்சி தலைவர் ரம்யா முத்துக்குமார், துணைத் தலைவர் ஆதவன் அதியமான், நகர செயலாளர் ஸ்ரீதர் உள்பட பலர் இருந்தனர்.Source link