‘நான் எப்போதும் இப்படி இருந்ததில்லை’
‘வேலை செய்வதே என்குப் பிடிக்கவில்லை’
‘எப்போதும் எனக்கு கோபம் வருகிறது’
‘என்னால் ஓய்வே எடுக்க முடியவில்லை’
‘எப்போதும் பதற்றமாகவும் சோர்வாகவும் உணர்கிறேன்’

இதில் ஏதேனும் ஒன்றை அல்லது ஒன்றுக்கு மேற்பட்டதை சமீபகாலமாக நீங்கள் தாரக மந்திரமாகக் கொண்டிருப்பவராக இருந்தால் மேற்கொண்டு படிக்கலாம்.

கரோனா பொதுமுடக்கம், எதிர்கால சந்தேகங்கள் போன்றவை, பொதுமுடக்கத்தால் வீட்டில் முடங்கியிருப்பது, குடும்ப உறுப்பினர்கள் வீட்டில் இருப்பதால் ஏற்பட்ட வேலைபளு, போன்றவற்றால், நான் எப்போதும் இப்படி இருந்ததில்லையே என்று குற்ற உணர்ச்சிக்கு உள்ளாகும் வகையில் உங்கள் மனநிலை மாறிப்போயிருக்கலாம்.

இது உலகிலேயே உங்களுக்கு மட்டும் நடந்திருப்பதாக நினைக்க வேண்டாம்.  நாம் இதுவரை எதிர்கொள்ளாத ஒரு பேரிடரை தற்போது சந்தித்திருப்பதால் ஏற்பட்ட சிக்கலே காரணம்.

கணிக்க முடியாத எதிர்காலம், நிரந்தரமற்ற நிகழ்காலம், கொடுங்கனவாக அமைந்த இறந்தகாலம் எல்லாமுமாக சேர்ந்துதான் இந்த நிலைக்கு தள்ளியிருக்கிறது.

கண்ணுக்குத் தெரியாத வைரஸுடன் உலகமே போராடிக் கொண்டிருக்கிறது. அதன் பாதிப்பு கண்கூடாகத் தெரிகிறது. இந்த நிலையில்தான் நாம் மனச்சோர்விலிருந்து வெளியே வர வேண்டியது அவசியமாகிறது.

இவற்றிலிருந்து அவ்வளவு எளிதாக வெளிவர முடியாது என்றாலும், நிச்சயம் வெளியே வர ஆயிரம் வழிகள் இருக்கின்றன.

ஆயிரமும் நமக்குத் தேவைப்படாது என்றாலும், அதில் ஒரு சில வழிகளை முடிந்த அளவுக்குக் கைகொள்வது சிறந்தது.

இது வரை நாம் கைகொள்ளாத சில நல்ல வாழ்க்கை முறையை பின்பற்றலாம். மிக ஆரோக்கியமான, சத்தான உணவுகளை சாப்பிடுவது, வீட்டை, சுற்றுப்புறத்தை தூய்மையாக பேணுவது, உறங்கும் நேரத்தை சீரமைப்பது போன்றவை உங்கள் மனநிலையை உடனடியாக மாற்றும் காரணிகளாக உள்ளன.

சத்தான உணவை சாப்பிடும்போது, ஒரு மனநிறைவு ஏற்படும். உங்கள் குடும்பத்தாரும் உங்களுடன் சத்தான உணவை சாப்பிடுகிறார்கள் என்பது மேலும் அதிக தெம்பைத் தரும்.

ஓய்வு நேரத்தில் கையில் செல்லிடப்பேசியை வைத்துக் கொண்டு மணிக் கணக்கில் நேரத்தை செலவிடுவதில் தவறில்லை. ஆனால், அதுவே உங்கள் உறங்கும் நேரத்தை பாதிக்கும் என்றால் அது தவறுதான். செல்லிடப்பேசியில் நேரத்தை அதிகம் செலவிட்டுவிட்டு, உறங்காமல், காலையில் சோர்வாக கண் விழிப்பதை இன்றே இப்போதே கைவிடுங்கள்.

அவ்வப்போது மூச்சை நன்கு இழுத்து உள்ளே சில வினாடி வைத்திருந்து, பிறகு வெளியேற்றும் மூச்சுப் பயிற்சியை மேற்கொள்ளுங்கள்.

நீங்கள் இதற்கு முன்பு மிகவும் விரும்பி செய்த, தற்போதைய கால மாற்றத்தால் விட்டுவிட்ட ஏதேனும் ஒன்றை மீண்டும் செய்யத் துவங்குங்கள். டைரி எழுதுவது, உங்கள் எண்ணங்களை எழுதுவது என எதுவாக இருந்தாலும்.

எப்போதும் கையில் செல்லிடப்பேசியை வைத்திருக்காமல், குறிப்பிட்ட நேரத்தில் அதற்கு விடுதலை கொடுத்து, நீங்கள் சுதந்திரக் காற்றை சுவாசியுங்கள்.

உங்கள் கோபம், சோர்வு போன்றவற்றை குழந்தைகளிடம் காட்ட வேண்டாம். அவர்கள் அதிக பாதிப்புக்குள்ளாவார்கள்.

உங்கள் அருகில் இருக்கும் யாருக்கேனும் உதவி செய்யுங்கள். பொருளுதவி, பண உதவி அல்லது சிறு சிறு தேவைகளை பூர்த்தி செய்தல். இது நிச்சயம் மனமாற்றத்தைத் தரும்.

உங்களுக்கு மிகவும் பிடித்த நண்பர்கள், குடும்ப உறவினர்கள் என யாருடனேனும் பேசுங்கள். உங்களுக்குப் பிடித்த விஷயங்களைப் பேசுங்கள்.

நீங்கள் பேசாமல் இருந்த நெருங்கிய தோழி அல்லது தோழர்களிடம்  நேரம் செலவிட்டு மனம்விட்டு பேசி மகிழ்வதும் உங்களுக்கு நல்ல மாற்றத்தைக் கொடுக்கும்.

புதிதாக எதையேனும் கற்கத் தொடங்கலாம். அது புத்தக வாசிப்பு, சமையல், ஓவியம், புதிய மொழியாகக் கூட இருக்கலாம்.
 Source link