விண்வெளி திட்டத்தில் முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் தனிநபர் பங்களிப்பு தொடர்பான சில கூற்றுகளுக்கு, அவருடன் பணியாற்றிய முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

அண்மையில் நம்பி நாராயணனின் வாழ்க்கை கதையை மையமாக கொண்டு ‘ராக்கெட்ரி: தி நம்பி விளைவு’ என்ற திரைப்படம் வெளியாகி இருந்தது. இதில் விஞ்ஞானி நம்பி நாராயணன் கதாபாத்திரத்தில் நடிகர் மாதவன் நடித்திருந்தார். அந்தப் படத்தில் இஸ்ரோ பயன்படுத்தி வரும் கிரையோஜெனிக் புரோபல்ஷன் (Propulsion) தொழில்நுட்பத்தில் நம்பி நாராயணின் பங்களிப்பு குறித்து தெரிவிக்கப்பட்டுள்ள சில கருத்துகளுக்கு விஞ்ஞானிகள் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளனர்.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய அவர்கள், “இந்தப் படத்தில் இஸ்ரோவில் நம்பி நாராயணன் பங்களிப்பு என தெரிவிக்கப்பட்டுள்ள பெரும்பாலான தகவல்கள் தவறானவை” என்றனர். இஸ்ரோவின் லிக்விட் புரோபல்ஷன் சிஸ்டம் மையத்தின் முன்னாள் இயக்குனர் ஏ.இ.முத்துநாயகம், டி.சசிகுமாரன், ஈ.வி.எஸ். நம்பூதரி ஆகியோர் இந்தப் படத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள சில கூற்றுகள் தவறு என குழுவாக இணைந்து மறுப்பு தெரிவித்துள்ளனர்.

மேலும், உண்மை என்ன என்பதை பொது வெளியில் கொண்டுவர வேண்டும் என்ற நோக்கில் இதனை தெரிவித்துள்ளதாகவும் முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். நம்பி நாராயணன் மீது தங்களுக்கு தனிப்பட்ட வெறுப்போ, பகையோ அல்லது தவறான எண்ணமோ இல்லை எனவும் அவர்கள் விளக்கம் கொடுத்துள்ளனர். அதோடு இஸ்ரோவின் வெற்றி அனைத்தும் கூட்டு முயற்சிக்கு கிடைத்த பலன் என்றும், எந்தவொரு தனிநபரும் அதற்கான பலனை தனி ஒருவராக பெற முடியாது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கிரையோஜெனிக் புரோபல்ஷன் தொழில்நுட்பத்தை பொறுத்தவரையில் நம்பி நாராயணன் வெளியேறிய 1994-ம் ஆண்டுக்கு பிறகுதான் அது சார்ந்த முக்கியமான முன்னேற்றத்தை இஸ்ரோ கண்டதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, 1980-களில் நடைபெற்ற இது சார்ந்த ஆய்வு திட்ட பணியில் நம்பி நாரயணனன் எந்தப் பங்கும் ஆற்றவில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

“பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி சார்ந்த படிப்பை பயின்ற போது தனது ரஷ்ய நண்பர் மூலம் கிரையோஜெனிக் புரோபல்ஷன் அமைப்பு குறித்து அறிந்து கொண்டதாக நாராயணன் அண்மையில் தெரிவித்துள்ளார். 80-களில் கிரையோஜெனிக் சார்ந்த ஆய்வுத் திட்டம் நடந்த போது அவர் இது குறித்து தனது சகாக்களுக்கோ, அதிகாரிக்கோ அல்லது இஸ்ரோ நிர்வாகத்திடமோ தெரிவிக்கவில்லை. இந்நிலையில், அவர் இதில் தனது பங்கு குறித்து பொது வெளியில் பல ஆண்டுகளாக பேசி வருகிறார். ராக்கெட்ரி திரைப்படத்திலும் இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால், இதற்கு பின்னால் உள்ள உண்மைத்தன்மையை பொது வெளியில் கொண்டு வர வேண்டும்” என எழுத்துபூர்வமாக முத்துநாயகம் வலியுறுத்தியுள்ளார். தனது பொறுப்பில் இருந்து லிக்விட் ஸ்டேஜ் திட்டத்தில் நம்பி நாராயணன் தனக்கு கீழ் பணியாற்றிய அதிகாரி எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இஸ்ரோவில் தனது பங்கு என தொடர்ந்து பல தவறான கருத்துகளை நம்பி தெரிவித்த வண்ணம் உள்ளார். அதனை சரி செய்யவே இப்போது இந்த விவகாரத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

மேலும், நம்பி நாரயணன் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டு குறித்தும் பேசியுள்ளார் முத்துநாயகம், “1994 வாக்கில் இஸ்ரோவில் இல்லாத கிரையோஜெனிக் தொழில்நுட்பத்தின் மீது தொடரப்பட்ட உளவு வழக்கு மற்றும் அது தொடர்பாக லிக்விட் புரோபல்ஷன் சிஸ்டம் மையத்தின் இரண்டு மூத்த விஞ்ஞானிகள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கையை அப்போதைய இஸ்ரோ தலைவர் கஸ்தூரிரங்கன் ஏன் எடுத்தார் என்பதை தெளிவுபடுத்த வேண்டியது அவசியமான ஒன்று” என அவர் தெரிவித்துள்ளார். அதற்கு இதுவரையில் தனக்கு விடை தெரியவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

நம்பி நாராயணனுடன் கைதான மற்றொரு விஞ்ஞானியான சசிகுமாரன் போலீஸ் கஸ்டடியில் இருந்தபோது உடல் ரீதியான தாக்குதலுக்கு ஆளாகவில்லை என தெரிவித்துள்ளார். இந்த வழக்கில் கைதான நம்பி நாராயணன், குற்றமற்றவர் என்பது 1998 வாக்கில் தெரியவந்தது. இந்தப் படத்தில் இஸ்ரோ குறித்து தெரிவிக்கப்பட்டுள்ள சில தவறான கருத்துகள் குறித்து இஸ்ரோ தலைவர் சோம்நாத் ஒரு முடிவு எடுக்க வேண்டும் எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.Source link