நடிகர், நடிகைகளுக்கு தினசரி சம்பளம் கிடையாது: தெலுங்கு தயாரிப்பாளர்கள் அதிரடி முடிவு

9/3/2022 12:32:37 AM

ஐதராபாத்: படப்பிடிப்பு செலவு குறைப்பு, நடிகர், நடிகைகளின் சம்பள குறைப்பு உள்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தெலுங்கு திரைப்படத் தயாரிப்பாளர்கள் கடந்த ஆகஸ்ட் 1ம் தேதி முதல் படப்பிடிப்பை நிறுத்தி வைத்துள்ளனர். இது தொடர்பாக தெலுங்கு திரைப்பட வர்த்தக சபையினரோடு திரைப்பட தொழிலாளர்கள் சங்கம், நடிகர்கள் சங்கம் பலசுற்று பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. தற்போது இதில் ஒரு முடிவு எட்டப்பட்டிருப்பதாக தெரிகிறது.
இந்த நிலையில் நேற்று தெலுங்கு திரைப்பட வர்த்தக சபை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: இனி நடிகர், நடிகைகள் தங்கள் உதவியாளர்களுக்கு சம்பளம், பேட்டா உள்ளிட்டவைகளை அவர்களே கொடுக்க வேண்டும். உள்ளூரில் படப்பிடிப்பு நடக்கும்போது போக்குவரத்து செலவு, தங்குமிட செலவை நடிகர், நடிகைகளே ஏற்க வேண்டும். இதனை தயாரிப்பாளர்கள் தர மாட்டார்கள். முன்னணி தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் இது பொருந்தும்.
அதோடு நடிகர், நடிகைகளுக்கு இனி நாள் கணக்கில் சம்பளம் தரப்படாது. ஒரு படத்திற்கு இவ்வளவு சம்பளம் என்கிற விதத்தில் சம்பளம் தரப்படும். ஒரு கால்ஷீட் என்பது 8 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாக மாற்றப்படும். ஒரு படம் திரையரங்கில் வெளியாகி 8 வாரங்களுக்குப் பிறகே ஓடிடியில் வெளியிட வேண்டும். இந்த முடிவுகள் வருகிற 10ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Source link