ஹராரே: ஜிம்பாப்வே அணியுடனான 2வது ஒருநாள் போட்டியில், 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இந்தியா 2-0 என முன்னிலை பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றியது. ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்துவீச முடிவு செய்தது. கெய்தானோ, இன்னொசென்ட் இருவரும் ஜிம்பாப்வே இன்னிங்சை தொடங்கினர். கெய்தானோ 7 ரன் எடுத்து சிராஜ் வேகத்தில் விக்கெட் கீப்பர் சாம்சனிடம் பிடிபட்டார். இன்னொசென்ட் 16 ரன், கேப்டன் சகாப்வா 2 ரன் எடுத்து ஷர்துல் தாகூர் வேகத்தில் வெளியேறினர். வெஸ்லி 2 ரன் எடுத்து பிரசித் பந்துவீச்சில் சாம்சனிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழக்க, ஜிம்பாப்வே 12.4 ஓவரில் 31 ரன்னுக்கு 4 விக்கெட் இழந்து தடுமாறியது. இந்த நிலையில், சிக்கந்தர் – ஷான் வில்லியம்ஸ் ஜோடி 5வது விக்கெட்டுக்கு கடுமையாகப் போராடி 41 ரன் சேர்த்தது. சிக்கந்தர் 16 ரன் எடுத்து குல்தீப் சுழலில் இஷான் வசம் பிடிபட்டார்.

 அதிரடியாக 42 ரன் சேர்த்த வில்லியம்சை (42 பந்து, 3 பவுண்டரி, 1 சிக்சர்) ஹூடா வெளியேற்றினார். ஒரு முனையில் ரயன் பர்ல் உறுதியுடன் போராட… லூக் ஜாங்வே 6, பிராட் எவன்ஸ் 9, விக்டர் 0, தனகா சிவங்கா 4 ரன்னில் ஆட்டமிழந்து அணிவகுத்தனர். விக்டர், தனகா அடுத்தடுத்து ரன் அவுட்டானது குறிப்பிடத்தக்கது. ஜிம்பாப்வே 38.1 ஓவரில் 161 ரன் எடுத்து ஆல் அவுட்டானது. பர்ல் 39 ரன்னுடன் (47 பந்து, 3 பவுண்டரி, 1 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய பந்துவீச்சில் ஷர்துல் 3, சிராஜ், பிரசித், அக்சர், குல்தீப், ஹூடா தலா 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து 50 ஓவரில் 162 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இந்தியா களமிறங்கியது. தவான், கேப்டன் ராகுல் இருவரும் துரத்தலை தொடங்கினர். ராகுல் 1 ரன் மட்டுமே எடுத்து பெவிலியன் திரும்ப, தவான் 33 ரன், இஷான் கிஷன் 6 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தனர். ஷுப்மன் கில் 33 ரன் எடுத்து ஜாங்வே பந்துவீச்சில் எவன்ஸ் வசம் பிடிபட இந்தியா 97 ரன்னுக்கு 4 விக்கெட் இழந்து சற்றே சரிவை சந்தித்தது.

இதனால் உற்சாகமடைந்த ஜிம்பாப்வே வீரர்கள் தாக்குதலை தீவிரப்படுத்தினர். எனினும், 5வது விக்கெட்டுக்கு தீபக் ஹூடா – சஞ்சு சாம்சன் ஜோடி 56 ரன் சேர்க்க இந்தியா வெற்றியை நெருங்கியது. ஹூடா 25 ரன் எடுத்து சிக்கந்தர் பந்துவீச்சில் கிளீன் போல்டானார். இந்தியா 25.4 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 167 ரன் எடுத்து வெற்றியை வசப்படுத்தியது. சாம்சன் 43 ரன் (39 பந்து, 3 பவுண்டரி, 4 சிக்சர்), அக்சர் படேல் 6 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஜிம்பாப்வே பந்துவீச்சில் ஜாங்வே 2, சிவங்கா, விக்டர், சிக்கந்தர் தலா 1 விக்கெட் எடுத்தனர். சஞ்சு சாம்சன் ஆட்ட நாயகன் விருது பெற்றார். தொடர்ச்சியாக 2வது வெற்றியுடன் 2-0 என முன்னிலை பெற்ற இந்தியா தொடரையும் கைப்பற்றிய நிலையில், கடைசி ஒருநாள் போட்டி நாளை நடக்கிறது.

Source link