புதுடெல்லி: மணிப்பூரில் நிதிஷ் குமார் ஐக்கிய ஜனதா தள கட்சியின் 5 எம்எல்ஏ.,க்கள் பாஜகவில் இணைந்த நிலையில் அவரை கடுமையாகக் கிண்டல் செய்துள்ளது மணிப்பூர் பாஜக. மணிப்பூரில் பைரன் சிங் தலைமையில் பாஜக ஆட்சி செய்கிறது. 60 சட்டப்பேரவை தொகுதிகளைக் கொண்ட மணிப்பூரில் 32 தொகுதிகளில் பாஜக வென்றது. 7 தொகுதிகளில் என்பிபி கட்சியும் 6 தொகுதிகளில் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தள கட்சியும் வென்றது. இந்நிலையில் மணிப்பூரில் ஐக்கிய ஜனதா தளக் கட்சியில் இருந்து 5 எம்எல்ஏக்கள் நேற்று மாலை பாஜகவில் இணைந்தனர். இது நிதிஷ் கட்சிக்குப் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் பாஜக ஐடி பிரிவு தலைவர் அமித் மால்வியா தனது ட்விட்டர் பக்கத்தில் நிதிஷ் குமாரை கிண்டல் செய்து ஒரு பதிவைப் பகிர்ந்துள்ளார். அதில், “நிதிஷ் குமாரின் கட்சி பிஹாரிலும் சரி வெளியிலும் சரி தனது தடத்தை இழந்து வருகிறது ஆனால் அவரோ பிரதமராகும் கனவைக் காண்கிறார்” என்று விமர்சித்துள்ளார்.

பிஹாரில் நிதிஷ் குமார் பாஜகவுடனான உறவை முறித்துவிட்டு ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சியுடன் கூட்டணி அமைத்து மீண்டும் ஆட்சி அமைத்துள்ளார். இந்நிலையில், 2024 மக்களவைத் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் மகா கூட்டணி சார்பில் நிதிஷ் குமார் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படும் வாய்ப்புள்ளதாகக் கூறப்படும் நிலையில் அவரை பாஜக இவ்வாறு விமர்சித்துள்ளது.

ஏற்கெனவே பிஹார் வருகை தந்த தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவிடம் நிதிஷ் குமாரை பிரதமர் வேட்பாளராக ஏற்றுக் கொள்வீர்களா என்று கேள்வி எழுப்பப்பட்டபோது நிதிஷ் திறமைசாலி மற்றவை எல்லோராலும் இணைந்து முடிவு செய்யப்படும் என்று கூறியதையும் பாஜக விமர்சித்தது. நிதிஷ்குமாரை சந்திரசேகர ராவ் அவமதித்ததாகக் கூறியது. இந்நிலையில் தற்போது மீண்டும் நிதிஷ் குமாரை பாஜக கிண்டல் செய்துள்ளது.Source link