ஹராரே: தேசிய கீதம் பாடுவதற்கு முன்னர் இந்திய கிரிக்கெட் அணியின் ஆக்டிங் கேப்டன் கே.எல்.ராகுல், தன் வாயில் இருந்த பபுள் கம்மை துப்பியுள்ளார். அவரது இந்த செயலைக் கண்டு அவரை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். அந்த வீடியோ இப்போது வைரலாகி உள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் விளையாடும் வகையில் ஜிம்பாப்வே நாட்டுக்கு பயணம் செய்துள்ளது. இரு அணிகளும் நேற்று ஹராரே மைதானத்தில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் விளையாடின. இந்தத் தொடரில் இந்திய அணியை கே.எல்.ராகுல் வழிநடத்தி வருகிறார்.

முதல் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்தச் சூழலில் போட்டி தொடங்குவதற்கு முன்னர் இரு நாட்டின் தேசிய கீதமும் ஒலிக்கப்படுவது வழக்கம். அதன்படி நேற்றைய போட்டி தொடங்குவதற்கு முன்னர் இரு அணி வீரர்களும் மைதானத்தில் அணிவகுத்து நின்றனர்.

அப்போது இந்திய நாட்டின் தேசிய கீதம் ஒலிக்கப்படுவதற்கு முன்னர் தனது வாயில் இருந்த பபுள் கம்மை எடுத்துள்ளார் கேப்டன் கே.எல்.ராகுல். இதனை தேசிய கீதத்திற்கு மரியாதை அளிக்கும் விதமாக அவர் செய்துள்ளார். இதுதான் தற்போது ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ளது. அந்த வீடியோவை பலரும் தங்களது சமூக வலைதளங்களில் பகிர்ந்த வண்ணம் உள்ளனர்.

நேற்றைய போட்டியில் கே.எல்.ராகுலுக்கு பேட் செய்யும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இருந்தும் அவரது செயல் பார்வையாளர்களின் மனதை வென்றுள்ளது.Source link