புதுடெல்லி: மத்தியில் ஆளும் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் பிஹார் முதல்வர் நிதிஷ்குமார் ஈடுபட்டுள்ளார்.

இது தொடர்பான முடிவு பாட்னாவில் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கிய ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) கட்சியின் தேசிய செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்துக்கு பிறகு ஜேடியு கட்சியின் தலைவரும் முதல்வருமான நிதிஷ் குமார், 3 நாள் பயணமாக நாளை டெல்லி வருகிறார்.

மணிப்பூரில் ஜேடியு கட்சியின் 5 எம்எல்ஏக்கள் ஆளும் பாஜகவில் சேர்ந்தனர். இங்கு ஜேடியு கட்சிக்கு 10 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் கிடைத்திருந்தன. இங்கு தற்போது ஜேடியு கட்சிக்கு ஒரு எம்எல்ஏ மட்டுமே இருக்கிறார்.

இந்த நிலையை பிஹாரிலும் உருவாக்க இருப்பதாக பாஜகவின் மூத்த தலைவர் சுசில்குமார் மோடி தெரிவித்துள்ளார். இச்சூழலில் ஜேடியுவின் கூட்டம் மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது. எதிர்க்கட்சிகள் சார்பில் பிரதமர் வேட்பாளராக தன்னை முன்னிறுத்த நிதிஷ் குமார் வலியுறுத்தவில்லை.

இதுகுறித்து ஜேடியு தேசிய தலைவர் லல்லன் சிங் கூறும்போது, “பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் அனைத்தையும் ஒன்றிணைப்பதே எங்கள் குறிக்கோள். எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளர் பற்றி இப்போதைக்கு நாங்கள் வலியுறுத்தவில்லை. மணிப்பூரில் எங்கள் எம்எல்ஏக்களை பாஜக விலைக்கு வாங்கலாம். ஆனால் அங்கு எங்கள் ஆதரவு வாக்குகளை அசைக்க முடியாது” என்றார்.

கடந்த 2019 மக்களவை தேர்தல் தோல்விக்கு பிறகு எதிர்க்கட்சிகளை இணைக்க காங்கிரஸ் முயன்றது. அடுத்து இப்பணியில் திரிணமூல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி இறங்கினார். அதேசமயம், தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவும் முயன்றார். டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலும் தனது பாணியில் பாஜகவுக்கு எதிராக முயன்று வருகிறார்.எனினும் இவர்களின் அனைத்து முயற்சிகளுக்கும் இதுவரை எந்தப்பலனும் கிடைக்கவில்லை.

பிஹாரில் பாஜக ஆதரவுடன் தொடர்ந்து ஆட்சி செய்துவந்த நிதிஷ் குமார் 2014 –ல் பாஜககூட்டணியில் இருந்து வெளியேறினார். 2014 தேர்தலில் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி முன்னிறுத்தப்பட்டதை எதிர்த்து அவர் வெளியேறினார். பிறகு லாலுவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைமையிலான மெகா கூட்டணியில் இணைந்து 2015-ல்ஆட்சி அமைத்தார். மீண்டும் பாஜகவுடன் இணைந்த அவர்,சமீபத்தில் மீண்டும் அக்கூட்டணியிலிருந்து வெளியேறினார்.Source link