ஐதராபாத்: தெலங்கானா மாநிலத்திற்கு வந்த ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், காமாரெட்டி மாவட்டத்தில் பாஜ நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். பின்னர், ஜஹீராபாத்தில் இருந்து காமாரெட்டி மாவட்டத்தில் உள்ள பன்ஸ்வாராவுக்குச் காரில் சென்று கொண்டிருந்த போது, விலைவாசி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி கொண்டிருந்த காங்கிரஸ் கட்சித் தொண்டர்கள், அவருடைய வாகனத்தை வழிமறித்தனர். இதனால், நிதியமைச்சரின் கார் உட்பட பாதுகாப்பு வாகனங்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டன. இதையடுத்து, அங்கு வந்த பாஜ.வினர் காங்கிரசாரை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், இரு கட்சி தொண்டர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அங்கு வந்த போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி அப்புறப்படுத்தினர். பின்னர், நிர்மலா சீதாராமனின் கார் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. இச்சம்பவம் காரணமாக அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Source link