திருத்தணி அருகே திருவாலங்காடுவில் அமைந்துள்ள வடாரண்யேஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் திருவாதிரை நட்சத்திர தினத்தன்று நடராஜருக்குஆருத்ரா அபிஷேகம் நடைபெறும். கரோனா தொற்றை தடுக்கும் வகையில், இந்த ஆண்டு மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை பக்தர்கள் இல்லாமல் அபிஷேகத்தை நடத்த மாவட்ட நிர்வாகம் முடிவு செய்திருந்தது. இதற்கு பாஜக கட்சியினர் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

இதையடுத்து, மாவட்ட நிர்வாகம் எடுத்த முடிவில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு, வடாரண்யேஸ்வரர் கோயிலில் நேற்று முன்தினம் இரவு தொடங்கி நேற்று அதிகாலை வரை நடராஜருக்கு ஆருத்ரா அபிஷேகம் நடைபெற்றது.

வழக்கமாக கோயில் தலவிருட்ச மான ஆலமரத்தின்கீழ் உள்ள ஆருத்ரா மண்டபத்தில்தான் நடராஜருக்கு ஆருத்ரா அபிஷேகம் நடைபெறும். இந்த ஆண்டு நேற்று முன் தினம் இரவு பழைய ஆருத்ரா மண்டபத்தில் விடிய விடிய 33 வகையான பொருட்களைக் கொண்டு மகா அபிஷேகம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் இருந்த நடராஜருக்கு அதிகாலை 5 மணிக்கு மகா தீபாராதனை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியைக் காண, கரோனா தொற்றுத் தடுப்பு நடவடிக்கையால் பக்தர்களை பொறுமையாக அமர்ந்து தரிசனம் செய்ய அனுமதிக்கவில்லை. மாறாக பக்தர்கள் வரிசையில் நின்று சுவாமியை தரிசித்துவிட்டு உடனடியாக அங்கிருந்து வெளியேறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.Source link