திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இதனால், தங்கும் அறைகள் பெறவும், தலைமுடி காணிக்கை செலுத்தவும், இலவச அன்னதான கூடத்திலும், சர்வ தரிசன வரிசையிலும் நீண்ட வரிசையில் பக்தர்கள் மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டியிருந்தது.

மேலும், அலிபிரி வாகன சோதனை சாவடி முதலே பக்தர்கள் வாகனங்களில் நீண்ட வரிசையில் சென்று ரசீது செலுத்தி திருமலைக்கு சென்றனர். இங்கு மிகவும் தாமதம் ஆவதால், நெடுஞ்சாலைகளில் உள்ள சோதனை சாவடிகளில் உள்ளதை போன்று, பாஸ்டேக் சிஸ்டத்தை அமல்படுத்த வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில், நேற்று பக்தர்களின் கூட்டம் அதிகரித்ததால், வைகுண்ட காம்ப்ளக்ஸின் 23 அறைகளும் நிரம்பி, பக்தர்களின் வரிசை கோயிலுக்கு வெளியே நீண்டிருந்தது. இதனால் நேற்று சர்வ தரிசனத்தில் 18 மணி நேரம் வரை பக்தர்கள் காத்திருந்து சுவாமியை தரிசித்தனர்.

நேற்று முன்தினம் செவ்வாய் கிழமை சுவாமியை 68,467 பக்தர்கள் தரிசித்தனர். இதில், 35,506 பேர் தலைமுடி காணிக்கை செலுத்தினர். உண்டியல் மூலம் ரூ.4.67 கோடி காணிக்கை செலுத்தப்பட்டது.Source link