திருச்சி மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிட நலப் பள்ளிகளில் போதிய அடிப்படை வசதிகள் இல்லை எனவும், இதனால் மாணவர் சேர்க்கை குறைந்து வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

திருச்சி மாவட்டத்தில் ஆதிதிராவிட நலத் துறையின் கட்டுப்பாட்டில் 13 மேல்நிலைப் பள்ளிகள், 14 உயர்நிலைப் பள்ளிகள், 68 ஆரம்ப பள்ளிகள், 5 நடுநிலைப் பள்ளிகள் உள்ளன.

இப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு கட்டிடம், கழிப்பறை, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் போதிய அளவில் இல்லை எனவும், ஆசிரியர்கள் பற்றாக்குறை இருப்பதாகவும் கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு இத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளில் இடிந்துவிழும் நிலையில் இருந்த 30 கட்டிடங்கள் இடித்து அகற்றப்பட்டன. அதற்குப் பதிலாக இதுவரை புதிய கட்டிடங்கள் கட்டிக் கொடுக்கப்படாததால், அப்பள்ளி மாணவர்கள் மரத்தடியிலும், அருகில் உள்ள அங்கன்வாடி மையங்களிலும் அமர்ந்து கல்வி கற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், பெரும்பாலான பள்ளிகளில் நிகழ் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை வெகுவாக குறைந்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதுகுறித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்க திருச்சி மாவட்டத் தலைவர் பா.லெனின் கூறியது:

திருச்சி மாவட்டத்தில் 85 ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில் போதிய அடிப்படை வசதியில்லை. இடிக்கப்பட்ட பழைய கட்டிடங்களுக்குப் பதிலாக புதிய கட்டிடங்கள் கட்டித் தராததால், மாணவர்கள் சேர்க்கை குறைவது மட்டுமின்றி கல்வித் தரமும் பாதிக்கப்படுகிறது.

குறிப்பாக, திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட ஆலத்தூர் ஆரம்பபள்ளியில் பழைய கட்டிடம் இடிக்கப்பட்டு ஓராண்டுக்கும் மேலாகியும், புதிய கட்டிடம் கட்டப்படாததால், அங்கு படிக்கும் 76 மாணவர்கள், அங்குள்ள நூலகத்தில் அமர்ந்து கல்வி பயின்று வருகின்றனர். மேலும், சுற்றுச்சுவர் இல்லாததால் அப்பகுதி வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் பள்ளி மைதானத்தில் குளம்போல தேங்கியுள்ளது.

மேலும், 30-க்கும் அதிகமான பள்ளிகளில் மாணவர் சேர்க்கை கணிசமாக குறைந்துள்ளது. கரோனாவுக்கு முன், கடந்த 2018-19-ம் கல்வியாண்டில், முதல் வகுப்பில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கை 719 ஆக இருந்த நிலையில், நிகழ்கல்வியாண்டில் 550 ஆகவும், 9-ம்வகுப்பில் 1,210 ஆக இருந்த மாணவர் சேர்க்கை எண்ணிக்கை தற்போது 925 ஆகவும் குறைந்துள்ளது.

தொடர்ந்து இதே நிலை நீடித்தால், மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ள பள்ளிகள் மூடப்படும் நிலை ஏற்படும். எனவே, அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுத்து சிறப்பு நிதி ஒதுக்கி பள்ளிகளுக்கான அனைத்து வசதிகளையும் செய்து தர வேண்டும் என்றார்.

இதுகுறித்து மாவட்ட ஆதிதிராவிடர் நலத் துறை அலுவலர் சரவணன் கூறியது:

திருச்சி மாவட்டத்தில் ஆதி திராவிட நலப் பள்ளிகளில் இடிக்கப்பட்ட பழைய கட்டிடங்களுக்கு பதிலாக புதிய கட்டிடங்கள் கட்ட நிதி கேட்டு அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டவுடன் புதிய கட்டிடங்கள் கட்டும் பணி தொடங்கப்படும். அடிப்படை வசதிகள் குறைவாக உள்ள பள்ளிகள் குறித்து கணக்கெடுக்கப்பட்டு வருகிறது.

ஆசிரியர் பற்றாக்குறை, மாணவர் சேர்க்கை குறித்து ஆராயப்பட்டு, அதற்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.Source link