சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் முதல் முறையாக மாநில அரசு பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் மாநாடு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று (ஆக.30) தொடங்கியது.

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், தமிழகத்தில் உள்ள 22 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாடு இன்று தொடங்கியது. இந்த மாநாட்டில், தமிழக அரசின் உயர் கல்வித்துறையின் கீழ் இயங்கும், 13 பல்கலைக்கழகங்கள் மட்டுமின்றி, பிற துறைகளின் கீழ் இயங்கும் பல்கலைக்கழக துணைவேந்தர்களும் கலந்துகொண்டனர். இந்த மாநாட்டை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இந்த மாநாட்டில்,தேசிய தரக் குறியீட்டு பட்டியலை வெளியிட்டுள்ள மத்திய அரசு சிறந்த உயர்கல்வி நிறுவனங்களுக்கு விருதுகளை வழங்குகிறது. இந்தப்பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட உயர் கல்வி நிறுவனங்கள் தேர்வு பெற்றிருந்தன. ஆனால், அரசு உயர் கல்வி நிறுவனங்களின் பங்களிப்பு குறைவாக இருந்தது.

இந்நிலையில் அடுத்துவரும் ஆண்டுகளில், மத்திய அரசின் தேசிய தர குறியீட்டுப் பட்டியலில் அதிகளவில் தமிழகத்தைச் சேர்ந்த கல்வி நிறுவனங்கள் இடம்பெற தேவையா நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். உயர்கல்வியின் தரத்தை மேம்படுத்துதல், மாணவர்களின் சேர்க்கையை அதிகரித்தல், உயர் கல்வி சார்ந்த தமிழக அரசின் திட்டங்களை பல்வேறு வகைகளில் கொண்டு சேர்த்தல், வரும் செப்டம்பர் 5-ம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள உயர் கல்வி படிப்புகளில் சேர்ந்துள்ள மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் உள்ளிட்டவை குறித்து இந்த மாநாட்டில் விவாதிகப்படும் என்று கூறப்படுகிறது.

இந்த மாநாட்டில், பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள், உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன், கால்நடைத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பங்கேற்றுள்ளனர். மேலும் அனைத்துப் பல்கலைக்கழகங்களின் பதிவாளர்கள் மற்றும் உயர்கல்வித்துறை அதிகாரிகளும் இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ளனர்.Source link