பிற மாநிலத்தவருக்கு வாய்ப்பளிப்பதாகவும், தமிழக மாணவர்களை புறக்கணிப்பதாகவும் வெளிவந்துள்ள தகவல்கள் உண்மைக்கு புறம்பானது என டி.என்.பி.எஸ்.சி. விளக்கம் அளித்துள்ளது.

சென்னை:

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தொல்லியல் அலுவலர் பதவிகளுக்கான தேர்வுகள் 29.2.2020 அன்று நடத்தப்பட்டு, 29.12.2020 அன்று தேர்வாணையத்தில் நடைபெற்ற கலந்தாய்வு மூலம் அனைத்து பணியிடங்களும் நிரப்பப்பட்டு இருக்கிறது. இப்பதவிக்கு முதுகலை தமிழ், வரலாறு, தொல்லியல் படிப்புகள் மற்றும் தொல்லியலில் முதுகலை டிப்ளமோ படிப்புடன், இளங்கலையில் தமிழை ஒரு பாடமாக கட்டாயமாக படித்திருக்க வேண்டும் என்பது கல்வித்தகுதியாக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.

தேர்வு எழுதிய மாணவர்களின் கல்வித் தகுதி, இடஒதுக்கீட்டு விதிகள், போட்டித்தேர்வில் பெற்ற மதிப்பெண் மற்றும் தொடர்புடைய மூலச்சான்றிதழ்களை சரிபார்த்தல் அடிப்படையில் மட்டுமே இறுதியாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தேர்வு பெற்ற 18 மாணவர்களும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் ஆவர். மேலும் இந்த 18 மாணவர்களில் தமிழக அரசின் தொல்லியல் துறையில் முதுகலை டிப்ளமோ படிப்பினை பெற்றுள்ள மாணவி ஒருவரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

எனவே ஊடகங்களில் பிற மாநிலத்தவருக்கு வாய்ப்பளிப்பதாகவும், தமிழக மாணவர்களை புறக்கணிப்பதாகவும் வெளிவந்துள்ள தகவல்கள் உண்மைக்கு புறம்பானது ஆகும். இதுமட்டுமில்லாமல் அருந்ததியர் சமூகத்தை சேர்ந்த மாணவர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்த செய்தியும் முற்றிலும் தவறானது. தேர்வு நடத்தப்பட்ட 18 பணியிடங்களில் இடஒதுக்கீட்டு விதிகளின்படி ஒரு பணியிடம் அருந்ததியினருக்கு ஒதுக்கப்பட்டு அப்பணியில் அருந்ததியர் பிரிவை சேர்ந்த மாணவர் ஒருவரே தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


https://www.youtube.com/watch?v=videoseriesSource link