நேர்மையான நிர்வாகமும், மேலாண்மையும் இல்லாத நாடு எவ்வளவு வளங்களைப் பெற்றிருந்தாலும் அவ்ளவும் பயனற்றுப் போகும். இந்தக் கருத்தைக் கீழ்க்கண்ட குறள் எடுத்துரைக்கிறது,

ஆங்கமை வெய்திக் கண்ணும் பயமின்றே

வேந்தமை வில்லாத நாடு

இந்தக் குறள் கூறுவதுபோல ஒரு நாட்டுக்கு நல்லரசன் – நல்ல ஆட்சியாளன் அமைந்தால் எவ்வாறு இருக்கும் என்பதற்கு உதாரணமாக, உருகுவே நாட்டின் முன்னாள் அதிபர் ஜோஸே முஜிகாவைக் கூறலாம். நேர்மையான நிர்வாகத்தை நடத்தி, தன்னுடைய பதவிக் காலத்தை அவர் நிறைவு செய்தபோது, ஆயிரக்கணக்கான மக்கள் கண்ணீருடன் அவருக்குப் பிரியா விடை அளித்தனர்.

உலகத்திலேயே ஏழ்மையான அதிபர் என்று அவர் குறிப்பிடப்படுகிறார். ஏனெனில், அரசு வழங்கிய ஆடம்பர மாளிகையைப் புறக்கணித்துவிட்டு, எளிய வாழ்க்கையை அவர் வாழ்ந்தார். தன்னுடைய மாதச் சம்பளத்தில் 90 சதவீதத்தை அறக்கட்டளைக்கு வழங்கி, நேர்மையான நிர்வாகத்தை அளித்த அதிபர் என்கிற பெருமைக்கும் அவர் சொந்தக்காரர் ஆனார். ஒரு பேட்டியில் “மிகவும் ஏழை அதிபர் என்று என்னை அழைக்கின்றார்கள்.

ஆனால், என்னுடைய பார்வையின்படி நான் ஏழை அல்ல; வாழ்க்கையை செல்வச் செழிப்பாக, மிகவும் ஆடம்பரமாக வாழ ஆசைப்பட்டுத் தன்னிடம் உள்ளதை வைத்து வாழ முடியாமல், இன்னும் வேண்டும்… இன்னும் வேண்டும் என்று அலைகிறவர்கள்தான் ஏழைகள்” எனக் கூறியுள்ளார்.

எல்லாம் இருந்தாலும்… ஒரு நிர்வாகத்தில் ஆயிரம் பணியாளர்கள் இருந்தாலும், தேவையான அனைத்து வசதிகளும், செயல்பாடுகளும் இருந்தாலும் பணிபுரிபவர்களுக்குத் தேவையானவை எல்லாம் கிடைத்தாலும், இவற்றையெல்லாம் வழிநடத்த நிர்வாகத் திறன்மிக்க ஆட்சியாளர் இல்லையென்றால், பயனில்லை.

ஒரு அரசன் அல்லது ஆட்சியாளர் சரியாக அமையாவிட்டால், மக்கள் நம்பிக்கை இழந்து, நிம்மதியின்றிக் கவலைப்படுவார்கள் என்பது நிதர்சனமான உண்மை என்பதையும் மேற்கண்ட குறள் சுட்டிக்காட்டுகிறது.

> இது, பா.சிதம்பரராஜன், க.சண்முகம் எழுதிய, இந்து தமிழ் திசை ப்ரீமியம் கட்டுரையின் ஒரு பகுதி. தினமும் பயனுள்ள ப்ரீமியம் கட்டுரைகளை வாசிக்க > ப்ரீமியம் கட்டுரைகள்

> ப்ரீமியம் கட்டுரைகள் & இ-பேப்பர் வாசிக்க – டிஜிட்டல் சந்தா திட்டங்கள்Source link