திருமங்கலம்:  ஜெயலலிதா மறைவுக்கு பின் தனது நிலைப்பாட்டை 7 முறை மாற்றிக் கொண்டவர் ஓபிஎஸ் என்று முன்னாள் அமைச்சர் உதயகுமார் குற்றம் சாட்டியுள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சர் உதயகுமார் அறிக்கையில் கூறி இருப்பதாவது: எடப்பாடி பழனிசாமி அதிமுக வளர்ச்சிக்காகவும், கட்சி நன்மைக்காகவும் எடுத்த அனைத்து முயற்சிகளையும் நடத்த விடாமல் முட்டுக்கட்டை போட்டவர் ஓபிஎஸ். ஒத்துழையாமை இயக்கத்தின் தலைவராக அவர் செயல்பட்டு வருகிறார். பொதுக்குழுவை தடை செய்ய கோர்ட்டிற்கு சென்றது யார்? பின்னர் உச்சநீதிமன்றம் சென்று தடையை நீக்கி பொதுக்குழு நடத்தலாம் என்ற பின்பும்,  கோர்ட்டுக்கு சென்று இயக்கத்தை சீர்குலைக்க நடவடிக்கையை  எடுத்தார்.ஓபிஎஸ்சிடம் எத்தனை மாற்றங்கள். ஜெயலலிதா மறைவுக்கு பின் முதலமைச்சராக பொறுப்பேற்றார். பின்பு பதவியை ராஜினாமா செய்தார். ஒரு குடும்பத்தின் பிடியில் இயக்கம் சென்று விடக்கூடாது எனவும், ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் கூறி தர்மயுத்தம் நடத்தினார். தனக்கு பதவி இல்லையெனில் அவர், தொண்டர்களையும் இயக்கத்தையும் பலி கொடுக்க தயாராகி விடுவார். ஓபிஎஸ் எடுத்த அனைத்து முயற்சிகளும் தோல்விதான். உங்கள் பதவிக்கு ஆபத்து என்றால் கட்சிக்கு ஆபத்து என கூறுவீர்கள். நாளைக்கு என்ன நிலைப்பாட்டில் இருப்பீர்கள் என தொண்டர்களுக்கு தெரியும். உங்களது நிலைப்பாட்டை இதுவரையில் ஏழு முறை மாற்றி உள்ளீர்கள். எடப்பாடி பழனிசாமி 15 முறை உங்களிடம் உடன்பாடு பேச்சு வார்த்தைக்கு வந்து பல முயற்சிகள் எடுத்தார். நீங்கள் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. இன்றைக்கு நீங்கள் அழைப்பு விடுப்பது யாரை ஏமாற்றுவதற்காக? யாரிடம் அனுதாபம் தேடுவதற்காக? இன்றைக்கு சாரைசாரையாக தொண்டர்கள் வருவதாக உங்கள் தரப்பினர் மாயத்தோற்றத்தை ஏற்படுத்தி கொண்டுள்ளனர். நீங்கள் எத்தனை பேரை போனில் அழைத்தீர்கள். அதனை எத்தனை பேர் நிராகரித்தனர் என்பது உங்களுக்கு தெரியும். எடப்பாடி பழனிசாமியிடம் தன்னெழுச்சியாக அனைவரும் சேர்ந்துள்ளனர். யாரும் ஆதரவு கொடுங்கள் என அவர் கேட்கவில்லை. மாவட்ட செயலாளர்கள், தலைமை கழகநிர்வாகிகள், பொதுக்குழு செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் எடப்பாடி பழனிசாமியை முன்மொழிந்து உள்ளார்கள். உங்கள் அழைப்பை ஏற்கவில்லை. ஏழு முறை நிலைப்பாட்டை மாற்றிய நீங்கள் இன்னும் எத்தனை முறை நிலைப்பாட்டினை மாற்றுவீர்கள் என தெரியாது. எங்களின் சட்டபோராட்டம் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Source link