ராஞ்சி: ஜார்க்கண்ட் முதல்வர் தகுதி நீக்கம் குறித்த இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவில் சஸ்பென்ஸ் நீடித்து வரும்நிலையில், ஆளும் கூட்டணி கட்சியின் எம்எல்ஏக்களுடன் ஹேமந்த் சோரன் படகு சவாரி செய்துள்ளார்.

தகுதி நீக்கம் குறித்து ஆளுநர் உத்தரவு இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மாலை 3 மணி அளவில் முதல்வர் ஹேமந்த், தனது கூட்டணி கட்சி எம்எல்ஏக்கள் 49 பரையும் தனது இல்லத்தில் இருந்து 3 வால்வோ சொகுசு பேருந்துகளில் அழைத்துக்கொண்டுச் சென்றார். அவர் ஜார்கண்டை விட்டு வெளியேறி வேறு மாநிலங்களில், குறிப்பாக காங்கிரஸ் ஆளும் சத்தீஸ்கர் மாநிலத்துக்கு அவர்கள் செல்லலாம் எனக் கூறப்பட்டது.

மாறாக, குந்தி மாவட்டத்தில் உள்ள லட்ராடு அணைக்கு அனைவரும் சென்றனர். அந்த அணையில் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) மற்றும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள், அமைச்சர்கள், முதல்வர் ஹேமந்த் என அனைவரும் படகு சவாரி செய்வது, புகைப்படம் எடுப்பது என மகிழ்ச்சியாக இருந்தனர். சில மணிநேரம் கழித்து அங்கிருந்து புறப்பட்டு மீண்டும் ராஞ்சியில் உள்ள முதல்வர் ஹேமந்த்தின் இல்லத்துக்கு மீண்டும் திரும்பினர்.

பின்னணி:

ஜார்க்கண்ட் சுரங்க துறை சார்பில், முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு கடந்த 2021-ம் ஆண்டு ஜூனில் சுரங்க ஒதுக்கீடு வழங்கப்பட்டது. தனது பதவியை தவறாக பயன்படுத்தி, சுரங்க ஒதுக்கீடு தொடர்பான ஒப்பந்தத்தை தானே பெற்றுக் கொண்டதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதுதொடர்பாக பாஜக., சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951-க்கு எதிராக முதல்வர் ஹேமந்த் சோரன் செயல்பட்டிருப்பதாக தலைமை தேர்தல் ஆணையத்தில் பாஜக மூத்த தலைவர் ரகுவர் தாஸ் கடந்த பிப்ரவரியில் புகார் அளித்தார்.

இதுதொடர்பாக ஹேமந்த் சோரன், பாஜக தரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில் தலைமை தேர்தல் ஆணையம் தனது முடிவை சீலிட்ட உறையில் ஜார்க்கண்ட் ஆளுநர் ரமேஷ் பாய்ஸுக்கு நேற்று முன்தினம் அனுப்பி வைத்தது. அதில் முதல்வர் ஹேமந்த் சோரனின் எம்.எல்.ஏ. பதவியை தகுதிநீக்கம் செய்ய பரிந்துரை செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆளுநர் ரமேஷ் பாய்ஸ் டெல்லியில் இருந்து நேற்று முன்தினம் ராஞ்சி திரும்பினார். தகுதி நீக்க நோட்டீஸை அரசு அறிவிப்பாணையில் ஆளுநர் வெளியிட்டதும், முதல்வர் ஹேமந்த் சோரன் ராஜினாமா செய்ய வேண்டும். ஆனால், அவர் இடைத்தேர்தல் மூலம் 6 மாதங்களுக்குள் மீண்டும் தேர்ந்தெடுக்கபட முடியும்.Source link