வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

ராஞ்சி: ஜார்க்கண்டில் பா.ஜ., பிரமுகர் சீமா பத்ரா தன் வீட்டில் பணிப்புரிந்த பழங்குடியின பெண்ணை சித்ரவதை செய்துள்ளார். இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அவர் கட்சியில் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மேலும், சீமா பத்ராவை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் பா.ஜ., தேசிய மகளிர் அணி உறுப்பினரான சீமா பத்ரா, தனது வீட்டில் பணிப்பெண்ணாக வேலைபார்த்து வந்த சுனிதா என்ற பழங்குடியின பெண்ணை கொடூரமாக சித்ரவதை செய்தது தெரியவந்துள்ளது. சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு, சீமா பத்ராவின் வீட்டிற்கு வேலை செய்வதற்காக அழைத்து வரப்பட்டுள்ளார். சில காலம் சீமா பத்ராவின் மகள் வத்சலா பத்ராவின் டில்லி வீட்டிலும் பணிபுரிந்துள்ளார். அங்கிருந்து வத்சலா பணிமாற்றம் செய்யப்பட்டதால், மீண்டும் சீமா பத்ராவின் வீட்டில் பணிபுரிந்துள்ளார். அப்போதிருந்து சுனிதாவை சித்ரவதை செய்துள்ளார் சீமா பத்ரா.

latest tamil news

சிறுநீரை வாயால் சுத்தம் செய்வது, சூடான பாத்திரங்களை கொண்டும், இரும்பு கம்பிகளை கொண்டும் தாக்குவது உள்ளிட்ட கொடுமைகளையும் சீமா செய்துள்ளார். இதில் சுனிதாவின் உடல் முழுதும் காயங்களுடன் பற்களும் உடைக்கப்பட்டுள்ளது. உணவு, தண்ணீர் இல்லாமல் அறையில் அடைக்கப்பட்ட நிலையில், சீமாவின் மகன் ஆயுஷ்மான் சுனிதாவுக்கு உதவ முயன்று ஜார்க்கண்ட் அரசாங்கத்தில் பணியாளர் துறை அதிகாரியாக இருக்கும் அவரது நண்பர் விவேக் பாஸ்கியிடம் நடந்த சம்பவங்கள் குறித்து தெரிவிக்க இந்த விவகாரம் வெளியே தெரியவந்துள்ளது. உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் இருந்த சுனிதா மீட்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டார்.

latest tamil news

இச்சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில் பழங்குடியின பணிப்பெண்ணை சித்ரவதை செய்த பா.ஜ., பிரமுகர் சீமா பத்ராவை ராஞ்சி போலீசார் கைது செய்தனர். முன்னதாக அவர் பா.ஜ.,வில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். சீமாவின் கணவர் மகேஸ்வர் பத்ரா ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுனிதாவை அம்மாநில பா.ஜ., தலைவரும் முன்னாள் முதல்வருமான பாபுலால் மராண்டி சந்தித்து ஆறுதல் கூறினார். அவர் கூறுகையில், ‛பாதிக்கப்பட்ட பெண்ணை சீமா பத்ராவின் வீட்டில் பணிபுரிந்த பெண்ணை தாக்கிய விதம் ஏற்றுக்கொள்ள முடியாது. அவர் கைது செய்யப்பட்டது நல்லது. கட்சியில் இருந்தும் அவர் நீக்கப்பட்டுள்ளார்’ என்றார்.

கைது செய்யப்பட்ட சீமா பத்ரா கூறுகையில், ‛இது பொய்யான குற்றச்சாட்டு. அரசியல் உள்நோக்கத்துடன் சுமத்தப்பட்ட இக்குற்றச்சாட்டில் நான் சிக்கியுள்ளேன்’ என்றார். பணிப்பெண்ணை பல ஆண்டுகளாக அறையில் அடைக்கப்பட்டு பா.ஜ., பிரமுகர் சித்ரவதை செய்த நிகழ்வு அம்மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Source link